பாலச்சந்திரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாலச்சந்திரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

1 ஜன., 2025

மீன்முள்ளு... சிறுகதை

ஐப்பசி மாத அமுத கலசத்தில் எனது முதல் சிறுகதை மீன்முள்ளு...

மீன்முள்ளு

"டேய் சேக்கு தீப்பெட்டி எடுத்துக்கிட்டு வந்திருக்கேன்"
'ம்ம்ம்...'
'சதுரத்தை கூட்டிக்கிட்டு கொக்கு மடைக்கு வந்துரு, நானும் பொங்கச்சோறும் அங்க வந்துடுறோம்... என்றான் மாங்கொட்டை.
“டேய்... உயிரோட இருக்குமாடா?”
”இருக்கும்டா...”
தண்ணி வச்சு எடுத்துகிட்டு வர்றோம்'
என்று மாங்கொட்டை அபி'சேக்' அக்காவிடம் மாட்டாமல் போய்விட வேண்டும் என்று ஓட்டமும் நடையுமாக அகல, மீன்முள்ளோ குறிப்பறிந்து விடுமுறை நாளேன விட்டுவிட்டாள்.
”இவ்வளவு வெள்ளனை எங்க கிளம்பிட்டனுங்க...” சிந்தனையோடு கடந்தாள்.

சேக் பள்ளி நாட்களில் எழுப்பினால் தான் பள்ளிக்கூடம். சேக் அப்பா டாரஸ் ஓட்டுனர் அதனால் பத்து பன்னிரெண்டு நாளுக்கு ஒரு முறை, இரண்டு மூன்று நாள் வீட்டில் தங்குவார் அன்று மட்டும் சேக், அப்பாவின் ஒரே குரலில் எழுவதும், அம்மா சித்தாள் வேலைக்கு செல்வதால் பரபரப்பில் காதை திருகி எழுப்புவது இயல்பாய் ஆகிப்போனது. அக்காவோ தம்பியை பெண்குழந்தையாக பாவித்து வளர்ந்ததால் 'சேக்'கை அபி என்று அழைப்பாள். பாய்விடு போல் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருப்பதால் நண்பர்கள் சேக் என்று அழைக்கலானர்.

'மாங்கொட்டை... உயிரோட இருக்குமாடா'
'இருக்கும்டா...'
'போன வாட்டி செத்து போச்சே...'
சின்ன டப்பாவில் காற்று போகாததால் செத்துப் போச்சு...'
'மேலத்தெரு தூண்டி சித்தப்பாகிட்ட யோசனை கேட்டு வந்து இருக்கேன். அவர் யோசனை சரியா வரும்டா... '
'சீக்கிரம்டா தண்ணி வைக்கனும், இல்லன்னா செத்துரும்' மாங்கொட்டையும் பொங்கச்சோறும் கொக்கு மடைக்கு விரைந்தனர். தலைமுடி மாங்கொட்டை சப்பிபோட்ட மாதிரி இருப்பதும், பொன்ராம் மார்கழி மாதம் பொங்க சோறு வாங்க கிண்ணத்தை எடுத்துக் கொண்டு எல்லா கோவிலுக்கும் சென்று சேகரித்து செல்வதால் பொங்க சோறு என்று பட்டப்பெயர் நிலைத்துவிட்டது. வீட்டில் கூட பட்டப்பெயரை கொண்டு அழைத்தால் தான் யார் என்று புரியும். 

மாங்கொட்டையும் பொங்க சோறும் கொக்கு மடைக்கு கீழே செடிபுதரில் ஒளித்து வைத்திருந்த கரட்டான் உயிருடன் இருப்பது தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர். காரட்டானின் கழுத்தில் தென்னை இலையின் நரம்பின் முனியில் சுருக்கிட்டு எங்கும் ஓடாதவாறு வைத்துக் கொண்டனர். பசியாலும் அடைத்து போட்டதாகும் சோர்வாக இருந்த கரட்டானுக்கு தண்ணீர் உடனடியாக கொடுத்தனர்.
'எங்கடா அந்த ரெண்டு பயலும் இன்னும் காணோம்...' 
'இருடா வருவாங்கே…
நானே பயந்துகிட்டேதான் டா… 
உன்னை வந்து பார்த்தேன். சேக் அக்கா மீன்முள்ளு கிட்ட மாட்டிருவோம்னு பயந்து..., 
தப்பிச்சேன் பொழச்சோம்னு வந்துருக்கேன்...' 
என்றான் மாங்கொட்டை.

‘அது இல்லடா... 
இன்னும் கொஞ்ச நேரம் ஆச்சுன்னா, கம்மா கரையில ஆள் நடமாட்டம் வந்துரும்.... 
அப்புறம் மாட்டிக்குவோம்..., 
எல்லார் வீட்டுலயும் நமக்கு பூசைதான்...' என்றான் சதுரம். முகம் பரந்த சதுர முகமாக இருப்பதால் சதுரம் என்ற பெயர் இவனுக்கு.

கம்மா கரையின் தூரத்தில் யாரோ சைக்கிள் ஓட்டிக்கொண்டு வருவது தெரிய, இருவரும் கமுக்கமாக மடைக்கு மறைந்தாக நினைத்துக் கொண்டு சத்தம் போடாமல் இருந்தானர். சைக்கிளில் வந்த நடுத்தர வயது ஆண் இரண்டு பையன்களில் ஒருவரை அடையாளம் கண்டுகொண்டு 'மீன் பிடிக்க புலு நொண்டுகிறாங்களா...' என்று தெரியாத மாதிரி கடந்து விட்டார்.

'பேப்பர் எடுத்துட்டு வந்திருக்கிறியாடா...'
'டேய் அதுக்கு அவன் தான் பொறுப்பு...'
'மாங்கொட்டையா...'
'ஆமாம்...'
”ஏண்டா அவன் கிட்ட கொடுத்த...
அக்காக்காரி மீன் முள்ளு ரொம்ப மோசம்... 
மோப்பம் பிடிச்சிடுவாடா...'
சொல்லிக் கொண்டிருக்கும் போது தூரத்தில் மூன்று உருவங்கள் தெரிய
'யார்ரா இன்னொருத்தன்... '
கூர்ந்து பார்த்து சதுரம் 'சப்பானி டா...' என்றான்.
'அவன ஏன்டா கூட்டிட்டு வராங்கே...'
'யாராச்சும் அதட்டு அதட்டினால், அவனால நம்ம எல்லாரும் மாட்டிக்குவோம்டா...'
'விடுடா... 
அவனுக்கு என் தெரியும் ஒப்புக்கு சப்பானிடா அவன்” என்று சதுரம் சொல்ல
'சர்வேயர் கேணியில் ஆட்டம் போட்டம்ல்ல.. 
இவனாலதாண்டா தெரிஞ்சு போச்சு... எங்க அப்பா அடிச்சுட்டார்டா...'
'டேய்... 
மீன் முள்ளு போய் சொல்லிதான் உதை வாங்கணோம்”
பேசிக் கொண்டிருக்கும் போதே மூவரும் அருகில் வந்து விட்டனர்.

'டேய் இடத்தை மாத்திடுவோம் டா...' என்றான் சேக்
'ஏண்டா...'
'எங்க அக்கா நம்மளை எல்லாம் பார்த்திருக்கும் என நினைக்கிறேன்...'
சப்பானிய தவிர இருவர் ஒரே குரலில் 'எங்கடா போறது...'
'டேய் இங்க எல்லாம் வராதுடா அது...' என்றான் சதுரம்
'டேய்... 
புகை வரும் டா, மாட்டிக்குவோம்' என்றான் சேக்
'பயந்தாங்கோலிய இருக்கீங்க டா...' என்றான் பொங்கசோறு
'மாங்கொட்டை.. பேப்பர் எடுத்துட்டு வந்துட்டியா...'
'எங்க அக்கா வரவும்... சப்பாணிக்கிட்ட சொல்லி எடுத்துட்டு வந்துட்டேன்டா'
'சரி சீக்கிரம்...' என்று

ஐவர் கூட்டணி தனது பூர்வாங்க பணியை தொடங்கினர்.
'பேப்பரை‌ எடுத்து வைகோலை வைத்து சுருட்டு என்றான்' பனங்கொட்டை

'டட்டடாடைன்... டட்டடாடைன்... 'என்று தானது கால் சட்டையில் இருந்து சிகரெட் ஒன்றை எடுத்து எல்லோரிடமும் காட்ட... பயம் கலந்த மகிழ்ச்சியில் எல்லோரிடமும். சுற்றும் மற்றும் யாரும் தங்களை கவனிக்கிறார்களா என்று பார்த்துக்கொண்டு வேலையில் இறங்கினர்.

'பரவால்டா... உயிரோட இருக்கு...
போன வாட்டி மாதிரி செத்துப் போயிருக்கும்மோ நினைச்சுகிட்டே வந்தோம்...'
பேசிக்கொண்டே காரட்டானின் சுருக்கை லாவகமாக தளர்த்தி வாயில் சிகிரெட்டை பத்தவைக்க தீ குச்சி சிலது வீணானது.
'டேய்... ஆறு ஏழு குச்சி தாண்டா இருக்கு... எத்தனை வாட்டி பத்த வைப்பீங்க...' என்றான் மாங்கொட்டை
'டேய் சிகிரெட்டை பத்தவச்சித்தான்டா அது வயில வைக்கனும்…’ என்றான் சதுரம்
மனித குரல் கேட்க...
டேய் சப்பானிய ஆள் யாரோ வர்ராங்க...
போய் பருடா...
'யாராச்சும் கேட்ட, கொக்கு பாக்க வந்தோமுன்னு சொல்லு... புரியுதாடா...”
சப்பானி நோட்டம் விட்டான்
'யாரும் இல்லை'
எல்லோரும் அமைதியாக எதுவும் சத்தம் வருகிறதா என நோட்டம் விட்டனர். ஆள் நடமாட்ட குறிப்பு இல்லை என்று தெரிந்தது விடவே...

'இப்ப யாருட பத்தவைக்கிறது...'
'வாய் நாறும்டா...'
'இருமல் வரும் டா...'
'டேய் அதே பழக்கமாயிறும்டா...'
'சிக்கிரமே செத்துருவம்டா...' என ஆளாளுக்கு பேசிக்கொள்ள...
'ஒரு வாட்டி தான்டா...
சும்மா விளையாட்டுக்கு தான்டா பத்த வைக்க போறோம்'... என்றான் மாங்கொட்டை
'டேய் இதெல்லாம் வேணாம்டா...
தெரிஞ்சா... நாளைக்கு உதை பின்னி புடுவாங்க டா..' என்றான் பொங்கசோறு

'சரிடா... யாரு பத்த வைக்கிறாங்களோ, அவங்களுக்கு ஐஸ் வாங்கி கொடுத்ததுற்ரது'
இப்படியாக பற்ற வைப்பது யார் என முடிவுக்கு வந்தது.

மாங்கொட்டை தானே பற்ற வைப்பதாக சொன்னான்.
வெறுவாயில் சிகரெட்யை வைத்து பார்த்தான் நடிகர்களின் பல்வேறு ஸ்டைலை செய்து காட்டிட
எல்லோரும் சிரித்தனர்
'டேய்...சிரிக்காதீங்கடா யாருக்காவது தெரிந்திட போகுது' என்றான் மாங்கொட்டை

முதல் தீக்குச்சியில் பற்றவில்லை. கை சுட்டுக் கொண்டதால் கீழே விட்டு விட்டான்.
'குடுரர்ரா...நான் பத்த வைக்கிறேன்' சதுரம் பத்த வைத்தான்.
'டேய்.. காத்தை உள்ள இழுக்கனும்டா.. பத்த வைக்கிறப்ப...' என்றான் சேக்
பத்தி கொண்டது ஆனால், உடனே அணைந்து விட்டது. இரண்டாம் முறை கரகட்டானின் வாயில் பொருத்த அணைந்து விட்டது.
'டேய்... நல்லா நாழு இழு இழுத்துட்டு வைக்கணும் டா...' என்றான்.
நாலு இழு இழுத்த பிறகு பற்றிக்கொண்டது. காரட்டானின் வாயில் வைக்க குப்பு என்று மூன்று முறை இழுத்து புகை விட கைதட்டி கைதட்டி ஆரவாரம் செய் ஆச்சரியத்துடன் 'சூப்பர் டா...'
'போடுர்ரா வெடியை...'
சதுரத்திற்க்கு வாய் என்னமோ மாதிரி இருக்க
...'தூத்.. தூ... ' துப்பினான்.
சிகரெட் அணைந்து விட்டது
'டேய் சதுரம் இன்னொரு வாட்டி டா...
'இப்பவே வாய் நாறுதுடா... 
என்னவோ மாதிரி இருக்குது, வாட வேற வந்திருச்சு... 
மாட்டிக்கிட்டன்னா உரிச்சு எடுத்துடுவாங்க டா... வேணாண்டா போதும்.' என்றான் சதுரம்.
'டேய்... பாக்கு இல்ல மிட்டாய் வாங்கிக்கலாம் டா... 
இன்னொரு வாட்டி டா...'
மறுமுறை சரியாக பற்ற வைத்து இழுக்க…

பின்னால் இருந்து மீன் முள்ளின் குரல்
'அடப்பாவி பயலுகளா...
களவாணிகளா...
அப்பவே நான் சந்தேகப்பட்டேன்...
ஐவர் கூட்டணி அயோக்கியத்தனம் பண்ண போகுதுன்னு...
சரியா போச்சு டா...
அபி, அப்பா கிட்ட சொல்லி...
என்ன பண்றேன் பாரு...
இந்த போறேன்...
எல்லார் வீட்டுக்கும் போறேன்...' என்று தம்பி அபியை இழுத்துச் சென்றாள்.
சேக்கை இழுத்துகிட்டு போகும் அவ அக்கா மீன் முள்ளு இன்னைக்கு நம்ம வீடுகள்ல போய் சொல்ல போற என்ன நடக்க போகுதோ என்று தூக்கி போட்டுவிட்டு...

மீன் முள்ளின் தம்பி அபிக்கு கையில் சூடு அம்மாவால். அபி தவித்து போய் விட்டான். ஒரே அழுகை மூன்று நாட்கள் கை மணிக்கட்டில் புண் கெதித்து போய்விட்டது. அம்மாவுக்கே குற்ற உணர்வு வந்து விட்டது
'இப்படி பண்ணிட்டோமே புள்ளைய கஷ்டப்படுறானே...“ என்று.
அதோட மீன் முள்ளு தான் துடியாய் துடித்து விட்டாள். தன் தம்பிக்கு புண் கூட ஆறிவிடும். பாவம் சதுரம். சதுரத்தின் அம்மா இறந்து விட, சின்னம்மா அவனை படுத்திய பாடும், முறை தவறி கெட்ட வார்த்தைகளையும், தகாத உறவில் எல்லோரும் இணைத்து பேசுவதால் அவளிடம் பேசுவதற்கு எல்லோரும் அஞ்சுவர். அவள் சதுரத்தை திட்டியதும், பட்டினி போட்டதும் மீன் முள்ளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
மூன்று நாளுக்குப் பிறகு அவளே சென்று
'என் வீட்டுக்கு சாப்பிட வாடா...' என்றாள் 'அடுத்த வீட்டில சாப்பிட்டேன்னு தெரிஞ்சுச்சு சின்னாத்தா இன்னும் நாலு நாளைக்கு சோறு போடாம, பள்ளிக்கூடம் அனுப்ப மாட்டா, மாடு மேய்க்க அனுப்பிச்சுரும் அக்கா...' என்றான்

சப்பாணி வீட்டில் திட்டோடு முடிந்து விட்டது. பொங்கச்சோறு வீட்டில் யாருடன் சேரக்கூடாது என்று அடித்தார்கள். மாங்கொட்டையை சற்று தொலைவில் உள்ள கிராமத்து அத்தை வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள்.
உள்ளூரில் சதுரமும் சேக்கும் ரெண்டு மாதத்துக்கு பிறகு பேசிக் கொண்டார்கள். கூடவே சப்பானியும் இணைந்து கொண்டான். இவர்களின் நட்பு விரிசலால் மிகவும் வருத்தப்பட்டது மீன் முள்ளுதான்.
கலகலன்னு ஊரை சுற்றி வருபவர்களை இப்படி காட்டிக் கொடுத்து ஊர்ல அனைவரும் அவர்களை பரிகாசம் செய்வதும், அவளுக்கு கூச்சமாக இருந்தது.

கோயில் திருவிழாவில் அவளுக்கு நேரகவே அவன் தம்பியிடம்
'என்னடா மாப்பிள்ளை தீப்பெட்டி இருக்கா? இல்லன்னா அங்குட்டுவா ஒரு கட்டு கட்டலாம்...' உறவுக்காரர் கேட்க
மீன் முள்ளுக்கு முகம் சிவந்துவிட்டது.
'பொம்பள சமைக்கிறத சாப்பிடுறிங்க? ஆம்பள பொம்பள அத்தனைக்கும் செரிக்கிது. அதுமாதிரி சாராயம் குடிச்ச எங்களுக்கு செரிக்காதா? எனக்கு ஒன்னு வாங்கி கொடு...'என்றாள், மீன் முள்ளின் குரலை கேட்டதும் பார்ட்டி இடைத்தை காலிசெய்தார்.

பள்ளிக்கூடம் முழு ஆண்டு விடுமுறையில் பிற்பாதியில் சப்பானி, சதுரம், சேக், பொங்கச் சோறு கூட்டணி மீண்டும் இணைந்து சுற்ற தொடங்கினர்.
சதுரம் புது ஆட்டத்தை துவங்கினான்
'டேய் கூட்டாளி... உப்பு சப் இல்லாத கொழுக்கட்டை சுட்டு திங்கிறாங்க... பொம்பளைங்களா சேர்ந்து செய்றாங்கடா, ஆம்பளை திங்க கூடாதாம்... பார்க்க கூடாதாம்...' 
ஆமா டா... நம்ம பசங்கதானே... கொடுக்கலாம்ல... கேட்டா எங்க அக்கா திட்டுகிறா... என்றான்.
'நான் தின்னு இருக்கேன் டா...' எங்க அம்மா யாரு கிட்டயும் சொல்லாதடா கொடுப்பாங்க...' சும்மா ரெண்டு ஒன்னு குடுப்பாங்க. ரொம்ப கேட்டா அடி விழுகும்...' என்றான் சப்பானி
'நான் திருடி தின்று இருக்கேன்...' சதுரம்
'குறைஞ்சிடுச்சின்னா மாட்டிக்கிவியேடா... சேக் கேட்டான்.

இப்போ பொங்கச்சோறுக்கு ஒன்னும் புரியவில்லை. சேக் தின்றதில்லை கேள்வி பட்டதோட சரி. மற்ற இருவர்களும் அப்பப்போ தின்று இருக்கிறார்கள்.

'அதில் என்னதான் அப்படி இருக்கு...' ஏழு நாள் யோசனைக்கு பிறகு திருடுவது என முடிவு செய்யப்பட்டது. பள்ளிக்கூடம் திறந்த மூன்றாவது வார செவ்வாய்க்கிழமையில் பெண்கள் கூடி பேசியதை சதுரம் தன் நண்பர்களிடம் சொன்னான்.

திட்டம் தயார்...
திட்டம் 1 : சப்பாணி அம்மாவிடம் கேட்டு பெறுவதும், தெரியாமல் சந்தேகப்படாத படி சின்ன சின்ன கொழுக்கட்டைகளை கொஞ்சூண்டு எடுத்துக் கொண்டு வரவேண்டும்
திட்டம் 2: சதுரமும் அவ்வாறே செய்ய வேண்டும் பேப்பரில் மடித்து கொண்டு வந்து விட வேண்டும் அதிகமாக எடுத்து மாட்டிக் கொள்ளக் கூடாது
திட்டம் 3: சேக் இந்த முறை தன் வீட்டில் அக்கா மீன் முள்ளு வீட்டில் நடப்பதால் கொழுக்கட்டை சுட்டு வைத்திருப்பார்கள் படையலுக்கு முன்பாக திருடி கொண்டு வர வேண்டும்.
திட்டம் 4: பொங்கச் சோறு குடும்பப் பெண்கள் இதில் கலந்து கொள்ள மாட்டார்கள். அவனுக்கு என்னவென்று இது தெரியாததால் பங்கிட்டுக் கொடுப்பது

நாள் நெருங்கி வர நான்கு நாளுக்கு முன்பதாகவே நண்பர்கள் திட்டம் நடைமுறை உகந்தவாறு உச்சத்தை அடைந்திருந்தது. இதில் பின்வாங்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். யாரேனும் ஒருவர் திட்டத்தை சொதப்பினால் அவர் நண்பர்கள் கூட்டத்தில் மிகக் கேலிக்குரிய ஒரு பொருளாக மாறிவிடுவார்கள். அந்த அவமானத்தை வாழ் நாள் முழுவதும் சுமக்கனும். எனவே மூவரும் முனைப்புடன் கெத்து காட்ட வேண்டியது அவசியம். இந்த திட்டம் நாள் நெருங்க நெருங்க தீவிரமாக இருந்தது. ஏனெனில் ஏற்கனவே பட்ட பெயர்களை சுமந்து திரிவதால் மேலும் மோசமான பட்ட பெயரை ஏற்க வேண்டி இருக்கும் என்பதாலும், மூவரும் திட்டத்தை அமுல்படுத்துவதில் தீவிரம் காட்டினார்.

நாளும் வந்துவிட்டது.
திட்டத்தில் சப்பானியும் வெற்றி, சதுரமும் வெற்றி, சொதப்பியது சேக்தான்...

சேக்கு அக்காவிடம் மாட்டிக் கொண்டு விட்டான். அக்கா எல்லாத்தையும் மோப்பம் பிடித்து விடுகிறாள். அதனாலதான் அவளை மீன் முள் என்று அழைக்கிறார்கள். மாட்டிக்கொண்டால் தப்பவே முடியாது. மிகவும் கோபமாக கண்டித்தாள். அம்மாவிடம் சொல்லிவிட்டால் சூடு வைத்து விடுவார். எனவே நீண்ட நேரம் முழித்திருந்து தூங்கி விட்டேன்.

காலையில் பள்ளிக்கூடம் புத்தகத்தை எடுத்துக்கொண்டு நண்பர்களை பார்க்காது செல்லலாம் என காலதாமதமாக பள்ளிக்குப் போக... நண்பர்கள் எனக்காக காத்திருந்து குருக்கே மறைக்க... நான் அழுதுவிட்டேன். மூவரும் பேசாமல் இருந்தனர். பிறகு நான் தோல்வியை ஒப்புக் கொண்டு விவரங்களை சொன்னேன்.
'விடுரா ஆளு...' என்றான் சதுரம்
பள்ளி மணி அடித்தது
'டேய் எடுத்துட்டு வந்தது கொடுங்கடா... இப்பவே பிரிஞ்சுக்வோம் இடைவேளையில் சாப்பிட்டுக்கலாம்' என்றான் சதுரம்
சப்பானி சதுரம் ரெண்டு பேர் கொண்டு வந்ததை சேர்த்தா மொத்தம் 13 கொழுக்கட்டை இருந்தது சின்னதும் பெருசுமா தட்டு உருண்டை பல வடிவங்களில் சப்பாணி மட்டும் எட்டு கொழுக்கட்டை கொண்டு வந்தான்.
சப்பாணி மேல் எல்லோருக்கும் மரியாதை உயர்ந்து விட்டது. 'ஒப்புக்கு சப்பானி' என்ற பதம் மறைய தொடங்கியது எனலாம்.

'டேய் என்னடா 13 தான் இருக்கு எப்படிடா பங்கு வகிக்கிறது' என்றான் சதுரம்
சப்பானிய இப்போது எதுவும் பேசாது சின்னதும் பெருசாக அளவாக சற்றே குறைய 95 சதவிகிதம் சரியாகவே பங்கு பிரித்தான். நண்பர்களுக்குள் நிறைவும் ஏற்பட்டது. ஆளுக்கு ஒன்றை வாயில் போட்டுக் கொண்டு, மீதியை பையில் வைத்தனர்.

சேக் பையில் வைக்க திறந்தபோது அதிர்ச்சி. பையில் போட்டாலமாக 20 கொழுக்கட்டைகள் மேல் சின்னதாக பேப்பரில் மடித்து இருந்தது.
'என்னடா... 20 எடுத்துட்டு வந்திருக்க நீ பெரிய ஆளு டா...'
சேக் புரிந்து கொண்டான். தன் அக்கா தான்…


சி பாலச்சந்திரன்
9865985773
1109,வ.உ.சி.நகர், மச்சுவாடி, புதுக்கோட்டை 622004