கர்னாடக இசையின் கதை (A Southern Music) ஆசிரியர்: டி.எம். கிருஷ்ணா தமிழில்: அரவிந்தன் 2021 - ₹ 175 (விலையடக்க பதிப்பு) பக்கம் 278 - வெளியீடு: காலச்சுவடு
காலச்சுவடு - விலையடக்கப் பதிப்பாக வந்துள்ள வாய்ப்பாட்டுக் கலைஞர் டி எம் கிருஷ்ணாவின் ஏ சர்தன் மியூசிக் என்ற ஆங்கில நூலின் தமிழாக்கம் தான் கர்நாடக இசையின் கதை.
ஏற்கனவே ஆசிரியரின் செபஸ்டியான் குடும்பக்கலை என்கின்ற மிருதங்க சிற்பிகளின் வரலாற்றை ஆய்வு நூலானது, மிருதங்கம் உருவாக்குபவர்கள் மற்றும் கலைஞர்களுக்கு இடையான உறவு மக்களிடையே அவர்களுடைய வாழ்க்கை பாடுகளை திறம்பட நேரடி ஆய்வு செய்து கதை வடிவாக அதை பதிப்பித்து இருந்தார். ஒரு முன்னேறிய சமூக பிரிவை சார்ந்த பிரபலமான வாய்ப்பாட்டு கலைஞர், அறிவியல் நோக்கில் பறந்துபட்ட ஜனநாயக நோக்கில் ஆய்வு செய்து இசை எல்லோருக்குமானது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தை எப்படி சுரண்டி அது கொலோச்சி இருக்கிறது என்பதை அடித்து நொறுக்கிய படைப்பு அது.
சமூகத்தின் நிலவும் சாதிய படிநிலை இசைக் கச்சேரிகளில் எப்படி வெளிப்படுகிறது. மிருதங்கம் உருவாக்குவதற்கு பின்னாடி எவ்வளவு உழைப்பு, எவ்வளவு நுட்பங்கள் அதை உருவாக்குபவர்கள் எப்படி சமூகத்தால் பொருளாதாரத்தால் பின் தள்ளப்பட்டார் என்கின்ற ஆய்வை திறம்பட விவரித்த நூல் அது. இசை குறித்து புதிய பார்வை, புதிய கோணங்களை அறிவியல் பூர்வமாக இன்றைய ஜனநாயக உலகில் எல்லோருக்குமான பாங்கோடு அதை செய்திருந்தார். அதன் பாதிப்பில் இந்த நூலை வாசிக்க. அடேயப்பா இதுவும் அவ்வளவு அற்புதமான ஆய்வு.
இசை குறித்து சமூகத்தில் நிலவும் பாகுபாடு நிறம் பாலினம் இடம் என எல்லா கோணங்களிலும் ஆய்வு செய்வது அதை ஜனநாயக படுத்துவது என்கின்ற அற்புதமான பணியை இதிலும் செய்திருக்கிறார். இசை குறித்த புரிதலை, அதன் ஏற்கக் கூடிய நுட்பங்களை புரியும்படி நமக்கெல்லாம் விலக்கிச் செல்லும் நல்ல நூல் இது. மொழிபெயர்ப்பாளரின் பொறுப்பு மிக்க கலைச்சொற்கள் மற்றும் மொழிநடைகளை பயன்படுத்தி நமக்கு புரிய வைக்கிறார். மொழிபெயர்ப்பாளர் நமக்கு கிடைத்த ஒரு அரிய பொக்கிஷம்.
இசையுலகத்திற்கு உள்ளேயும் வெளியிலும் கடந்த நூற்றாண்டு களாக நிகழ்ந்துவரும் பல்வேறு விவாதங்கள்,எழுப்பப்படும் கேள்விகள் ஆகியவை முதல்முறையாக விரிவாகவும் ஆழமாகவும் காலில்தான் அசைப்பட்டிருக்கின்றன. இசையுலகினுள் நிலவும் சாதி, பாலினம், மொழி, மதம் ஆகியவை சார்ந்த பாகுபாடுகள், கருத்துப் போக்குகள் ஆகியவை குறித்து மிகவும் விரிவாகவும் கூர்மையாகவும் கிருஷ்ணா அலசுகிறார். வாய்ப்பாட்டுக் கலைஞர்களுக்கும் பிற கலைஞர்களுக்கும் இடையே இருக்கும் படிநிலைகள், கச்சேரிக்கான ஆகிவந்த கட்டமைப்பு, பாடல்களின் தேர்வு ஆகியவற்றையும் கிருஷ்ணா கேள்விக்கு உட்படுத்துகிறார். தூய கலை சார்ந்த இசைக்கும் இதர வகையிலான இசைக்கு இடையே நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய வேற்றுமைகளைத் துல்லியமாகச் சுட்டுகிறார். கலை வடிவின் நோக்கமும் அதன் வெளிப்பாடும் கொண்டிருக்கும் உறவை முன்வைத்துப் பல கூறுகளை விவரிக்கிறார். இசைக்கும் இறைமைக்கும், இசைக்கும் மொழிக்கும், இசைக்கும் அது நிகழ்த்தப்படும் இடத்திற்கும் இடையிலான உறவுகளையும் நுணுக்கமாக ஆராய்கிறார். கர்னாடக, இந்துஸ்தானி இசை வடிவங்களை ஒப்பிட்டு விவாதிக்கிறார். இணைப்பிசையின் நோக்கங்களையும் பலன்களையும் துருவி ஆய்கிறார். நாட்டியத்திற்கும் இசைக்குமான உறவைப் பற்றியும் பேசுகிறார்; இசை வரலாறு குறித்த சுருக்கமான சித்திரத்தையும் தீட்டிக் காட்டுகிறார்.
நேர்மையான கேள்விகள், தீவிரமான அலசல்கள், கூர்மையான விவாதங்கள், தர்க்கபூர்வமான அணுகுமுறை ஆகியவற்றை இந்த நூலின் ஆதாரமான கூறுகளாகச் சுட்டலாம். ஆசிரியரின் சிந்தனைகளையும் கருத்துக்களையும் ஒருவர் நிராகரிக்கலாம். ஆனால் அவற்றுக்குப் பின்னால் இருக்கும் அவருடைய ஆழ்ந்த அக்கறையையும் உழைப்பையும் மறுக்க முடியாது. அவற்றை முன்வைப்பதில் அவர் கைக்கொள்ளும் அறிவார்த்தமான, தகவல் சார்ந்த, தர்க்கபூர்வமான முறையியலை மதிக்காமல் இருக்க முடியாது. இந்த நூலின் ஆகப்பெரிய வலிமை இதுதான்.
முடிவுகளை முன்வைப்பவரல்ல ஆசிரியர். கேள்விகளை எழுப்பி, விவாதங்களைத் தூண்டுபவர். தன் கருத்துக்களையும் உறுதிபடச் சொல்பவர் என்றாலும் அவை குறித்த உரையாடலுக்கு எப்போதும் தயாராக இருப்பவர். இந்த நூலும் ஒருவகையில் உரையாடல்தான். முடிவற்ற உரையாடல் இறுக்கமான கட்டமைப்பும் பூடகமான விதிமுறைகளும் கொண்ட கர்னாடக இசையுலகின் உள்ளேயிருந்து அந்த உலகத்தை நோக்கி விமர்சனபூர்வமாகக் கேள்விகளை முன்வைக்கும் முதல் கலைஞர் அல்ல கிருஷ்ணா. அந்தக் கேள்விகளை இவ்வளவு விரிவாகவும் வெளிப்படையாகவும் தெளிவாகவும் முன்வைத்து விவாதிக்கும் முதல் கலைஞர்.
"நான் ஏற்கெனவே உறுதியாகக் குறிப்பிட்டதுபோல, கர்னாடக இசையின் கலை சார்ந்த வடிவத்தைச் சென்னையின் மேட்டுக்குடி பிராமணர்கள் உருவாக்கவில்லை. அரண்மனைகளிலும் கோவில்களிலும் இந்தக் கலையை நிகழ்த்திவந்த பல்வேறு சமூகத்தினரின் கூட்டு முயற்சியால் இது உருவானது."
பிராமணர் அல்லாதவர்கள் இசையில் நுழையும் போது அவர்களின் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள போராட்டத்தை "சமத்துவம் என்பது மிகவும் சாதாரணமான மரியாதை. அவர்களுடைய இசை, அடையாளம், வரலாறு, பங்களிப்பு ஆகியவற்றுக்கான மரியாதை. ஆனால் அவர்கள் பெற்றதெல்லாம் சில சலுகைகள், மகத்தான கலை மேதைமைக்கான தட்டிக் கொடுக்கும் பாராட்டுக்கள் ஆகியவைதாம்." இன்று நுட்பமான வரிகளால் இது நாள் வரையும் இசையின் சாதிய ஒடுக்குமுறையை ஆய்வு மூலம் நிறுவுகிறார்.
கடைசி வார்த்தை என்னும் அவருடைய கடைசி அத்தியாயம் இப்படியாக முடிவுறுகிறது.
"இந்தப் பக்கம் வரையிலும் தொடர்ந்து படித்துக்கொண் டிருக்கும் வாசகருக்கு நான் சொல்ல விரும்புவது இதுதான்: என்னை ஒப்புக்கொள்ளுங்கள், ஒப்புக்கொள்ளாதீர்கள், வாதிடுங்கள், சண்டை போடுங்கள். இங்குள்ள கருத்துகளுடன் போரிடுங்கள். இவை அனைத்தையும் சக பயணியாகச் செய்யுங்கள்."
பொறுப்பு மிக்க கலைஞனின் அறிவியல் வகைப்பட்ட இசை குறித்தான ஆய்வு. எல்லோரும் படித்து கொண்டாட வேண்டிய நூல். இது ஒரு சிறிய அறிமுகமே.
பாலச்சந்திரன்.