பறம்புமலை - பிரான்மலை - கொடுங்குன்றிஸ்வரர்

சங்க இலக்கியங்களில் பறம்புமலை கபிலர் முல்லைக்கு தேர் கொடுத்த வேள்பாரி ஆட்சி செய்த பழைய மலைப்பகுதியில் எனது ஐந்தாவது கவிதை தொகுப்பு முப்பரிமாண புழுக்கம் வெளியீட்டு நிகழ்வு சிறப்புற நடைபெற்றது. மேற்கண்ட நூலினை தோழர்கள் முன்னிலையில், சிங்கப்பூர் பொழில் பண்பலை ஐயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வெளியிட்டார். மலையின் மேல் வெளியிடுவதாக திட்டம், பலருக்கும் ஏறுவதில் சிரமம் என்பதால் கீழே இருக்கக்கூடிய வைதீக தளமான, கொடுங்குன்றீஸ்வர் ஆலயத்தில் வெளியிடப்பட்டது. 

கீழிருந்து 3.15 மணி நேர பயணம். பறம்புமலை உச்சியை அடையலாம். நடப்பு வழக்கில் பிரான்மலை எனவே அழைக்கப்படுகிறது. சங்க இலக்கியங்கள் தரவுப்படி கடினமான முயற்சியுடன் மலையின் உச்சிக்கு செல்ல முடியும். அன்றைய காலத்தில் வழித்தடமோ, எல்லோரும் பயன்படுத்தும் படியோ இருப்பதற்கான வாய்ப்பு இல்லை. அதைத் தாண்டி ஒருவர் மேலே செல்வது பலரையும் காணடித்திருக்கும். 

வைதீக மரபுப்படி அங்கு இருக்கக்கூடிய இறைவனுடைய பெயர் கொடுங்குன்றீஸ்வரர். சங்க இலக்கிய வாழ்வியலுக்குப் பிறகு சமீபத்தில் ஏற்பட்ட வைதீக மரபின்படி இந்த குன்றில் ஏறுபவர்கள் சிரமப்பட வேண்டும், பலர் இறந்து போவார்கள் என்பதாக கொடும் குன்று ஈஸ்வரர் என்ற சிவனின் காரணப் பெயரில் கோயிவில். பிற பரிவார தெய்வங்கள் உள்ளே இருக்கின்றன. முல்லைக்கு தேர் கொடுத்த பாரி, பைரவர் கோவில் என 100 மீட்டர் உயரத்தில் கோவில் மலையில் உள்ளது. 

மலையின் உச்சி அடைவது சங்க இலக்கியத்தில் சாதனையாக அல்லது உயர் மதிப்பு மிக்க நிகழ்வாக கருதுபட்டது. வைதீக மரபில் மலை ஏறுவது ஆபத்தானது கீழேயே சிவனாக வழிபடுவோம் என்ற முறையில் மாறி இருப்பது பெயர் காரணங்களிலிருந்து ஊகிக்க முடிகிறது. 

அதேபோல மலை உச்சியில் நீர் சேமிப்பை இயற்கையாகக் கொண்ட, சுனைப்பகுதியும், குறுகலான கரணம் தப்பினால் மரணம் பாதை அமைப்பு கொண்ட தர்காவும் உள்ளது. முகமது அப்துல்லா என்ற பத்து வயது சிறுவன் அங்கு போய் மறைந்ததால் அது உருவாகியது என சொல்லுகிறார். என் அளவில் பெரிய குடும்பத்து பையன் மலையேறி தவறி விழுந்திட, குடும்பத்தாரின் நினைவுகள் தர்காவாக மாறி இருக்கும் என்று யூகிக்கிறேன். மலை ஏற முடியாதவர்களுக்கான இதே மாதிரி கீழே பள்ளிவாசலுடன் கூடிய உணவுக்கூடம் (கந்திரி) உள்ளது.

மேல ஒரு பிள்ளையார் கோவிலில் மூன்று பிள்ளையார் சிலை உள்ளது. நடந்து செல்லவே அச்சப்படும் சிறிய குன்று போன்ற பகுதியில் முருகன் கோவிலும் உள்ளது. உச்சி அடையும் பக்தர்களுக்கு பாதை வசதிகள் பாறை மீது செதுக்கப்பட்ட படி போன்ற அமைப்புகள், மோசமான வழுக்கும் பாறைப் பகுதியில் இரும்பு கைப்பிடி பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. கீழிருந்து துவங்கி உச்சி அடையும் வரை இடையிடையே தாகம் தணிக்கும்  குளிர்பான கடைகள் 5 உள்ளன. உச்சியில் டீக்கடை ஒன்று என பெரும்பாலும் சனி ஞாயிறு நாட்களில் இயங்குகிறது. 

பல சிரமங்களுக்கிடையே பக்தர்கள் வேண்டுதலுக்காக, நிறைவேறிய வேண்டுதலுக்காக உடல் உபாதைகளையும் தாண்டி மெதுவாக உச்சி அடைந்து விடுகின்றனர். என் போன்ற சுற்றுலா பயணிகளுக்கு அவர்கள் மீது கரிசனம் ஏற்பட்டாலும், அவர்களின் உறுதி நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. மலைப்பாதை அமைப்பு மிகவும் கடினமானது, சீரற்ற முறையில் உயரம் கூடக் குறைய படி, வழுக்கும் தன்மை கொண்டதாக, புடிமானம் அற்றதாக இருந்தும் கூட பலரும் பயணிக்கின்றனர். குறிப்பாக இஸ்லாம் சமூகத்தை சார்ந்தவர்கள் குடும்பமாக குழந்தைகள் வயதானவர்கள் உடல் பருமன் ஆனவர்கள் தர்காவுக்கு பயணிக்கின்றனர்.

மேலே உணவு கிடையாது நாம் தான் சிற்றுண்டி எடுத்துச் செல்ல வேண்டும். இடையில் இருக்கும் கடைகள் தாகத்தையும் தற்காலிக பசியையும் தள்ளி போடுகிறது. இப்படியான பயணத்தில் மேலே ஏறுவதற்கு எடுத்துக்கண்ட நேரத்தில் பாதி நேரம் போதுமானது. அடுத்த முறை செல்ல முடியுமா என்று தெரியவில்லை ஆனால் ஒரு கடினமான மறக்க முடியாத பயணம். 

இந்த முறை மழையில் நனைதல் வேறு. கூட்டாக பயணிப்பதில் வெவ்வேறு வயதுடய, வெவ்வேறு உடல் தகுதி கொண்டோரோடு பயணிப்பது கவனத்துடன் செயல்பட வேண்டி இருக்கிறது. 

என் அளவில் இந்த மலையை மண் சார்ந்த மனிதர்கள் ஒரு முறையாவது அதன் உச்சியை அடைந்து விட்டு வர வேண்டும். எவ்வித வாகன போக்குவரத்தும் சாலைகளோ அமைக்கப்படாது என்பது தெரிகிறது. அந்த வகையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பான மலை. உள்ளூர் மக்கள், பக்தர்கள் பலரிடம் வினவும்போது ஒருமுறை உச்சிக்கு போய் வந்துவிட்டால் நீங்கள் நினைப்பது நடந்தே தீரும் என்கின்ற தீர்க்கத்தை அளிக்கின்றனர். அதன் மீது எனக்கு திருப்தி கிடையாது, ஆனா போதும் மக்களின் அந்த உறுதிப்பாடு அவர்களை அதை நோக்கி நகர்த்தும் என்பது புரிகிறது. ரயில் சினேகம் போல பிரான்மலை உச்சி அடையும் பயணத்தில் பிரானன் போனாலும் இலகுவான, நெருக்கமான நட்புகளை கண்டடைய முடிந்தது சிறப்பு. 

கூடுதலாக 'விரிசல் ஏற்படக்கூடிய நட்புகள் இங்கு பயணத்தை மேற்கொள்ளும் போது கண்டிப்பாக அவர்களுக்குள் ஒரு புத்துயிர்ப்பு ஏற்படும் என்றார் பெரியவர். கணவன் மனைவி பிணக்குகள் கூட சீராகும்' என்றார்.

சமீபத்தில் சங்க இலக்கியத்தின் பால் ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக வரலாற்றின் நிலைத்திருக்கக் கூடிய சொந்த பகுதியில் உயரமான மலையில் நூல் வெளியிட வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் இருந்தது அது நிறைவேறி உள்ளது. இதை ஒருங்கிணைத்தது நமது பேராசிரியர் சிவகவி காளிதாஸ் அவர்கள் மற்றும் கவிஞர் சிவகுமார் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. 

நூலை வெளியீடு செய்த சிங்கப்பூரிலிருந்து இயங்கும் பொழில் பண்பலை ஐயா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் சீரான ஏற்பாடும் நல் உணர்வும் மதிப்புமிக்கது, அவரை கௌரவித்தல் ஒரு பக்கம் என்றாலும் அவர் நம்மளை கௌரவித்தது மேலும் சிறப்பு. எல்லோருக்கும் நினைவு பரிசு, சான்றிதழ், கோடாரி தைலம், சாக்லேட் என மலையேற்ற சிற்றுண்டி செலவு என எதிர்பாக்காத உள்ளன்பு திக்குமுக்காட செய்தது. நான்கு பெண்கள் உட்பட 11 பேரின் மலையற்ற நிகழ்வு என்றும் நினைவில் நிற்கும். ஏற்பாடு செய்த அனைவருக்கும் அன்பும் நன்றி என்றும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பாரதி முற்றம்

உயிர்சுருட்டி - வாசிப்பனுபவம்