உயிர்சுருட்டி - வாசிப்பனுபவம்
தோழர் ஆய்வாளர் பன்முகப் பரிமாணம் கொண்ட முனைவர் கனிமொழி செல்லத்துரை அவர்கள் ஆய்வுபுலத்தில் இருந்து புனைவு படைப்பிலக்கியத்தை நோக்கி நகர்ந்திருக்கிறார். அவரின் முதல் நாவல் கீழத் தஞ்சையின் விவசாயப் பின்புலத்திலிருந்து கிராமப்புற பாகுபாடு உளவிலில் மையம் கொண்டுள்ள சமூக பொருளாதார பண்பாட்டுச் சூழலை, அதன்வழி உழைக்கும் மக்களின் பாடுகளை அகப்புற நெருக்கடிகளில் குடும்ப உறவுகளில் ஊடாட்டங்களை வட்டார வழக்கு சொற்களை கொண்டு தொடர்ச்சி மாறாது கனம் குறையாது பதிவு செய்கிறார்.
எனது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு நன்னிலம் பக்கம் என்பதால் மிக நெருக்கமான வட்டார வழக்குச் சொற்கள் இருப்பதில் வியப்பில்லை. சொற்களுக்காகவே திரும்பத் திரும்ப படிப்பேன் என நினைக்கிறேன்.
முருகையன் என்ற கதாபாத்திரம் தோழர் முருகையனை நினைவுபடுத்துவதாக இருக்கிறது. கதையின் பாத்திரங்களில் நேர் எதிர் பிம்பங்கள் இல்லை சமூகத்தின் பண்பாட்டுச் சிக்கலை விவரனை செய்யும் பாத்திரப் படைப்புகளாக உள்ளன. எழுத்தாளரின் இந்த கதை மாந்தர் தேர்வு சமூக அக்கறையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. அவரின் இனிவரும் எழுத்துக்கள் சமூக நீதியை வலியுறுத்துவதாக இருக்கும் என நான் நினைக்கிறேன். கதையோட்டம் பாத்திரப் படைப்புகளின் உட்கிடக்கையை அசலான கிராமப்புற உளவியலை பேசுகிறது.
எழுத்தாளரின் ஆய்வு கட்டுரைகளை நான் வாசித்ததில்லை. அவரின் புனைவு இலக்கியத்தின் வழியாக கட்டுரையை வாசிக்க வேண்டும் என்கின்ற ஆவலை ஏற்படுத்தும் எழுத்து நடை கைவரப் பெற்றவராக இருக்கிறார். தொடர்ந்து படைப்பு பங்களிப்பு செய்வாரெனில் படைப்பிலக்கியத்தில் பாய்ச்சலையும், அதிர்வையும் ஏற்படுத்துவார் என நம்பலாம். நல்ல வாசிப்பு அனுபவத்தையும் வட்டார வழக்கு உரையாடலையும் அதன் வழி சமூகத்தின் புகையிலை பயிர், மலர் சேகரிப்பு மற்றும் உப்புப் பாத்தி குறித்த அதன் வேளாண்மை முறை, அதற்குரிய சொல்லாடல்கள் போன்றவற்றை கூடுதலாக கிராமப்புற பள்ளிக்கூடங்களில் மாணவர் ஆசிரியர் உளவியல் தந்தை, மகன், மனைவி, குடும்ப உறவு போன்றவற்றை கண்முன் காட்சிப்படுத்துகிறார்.
வாழ்த்துக்கள். கோயிலுக்கு பாத்தியப்பட்ட பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் எவ்வாறு கிராமத்து ஆதிக்க சமூகத்தால் அபகரிக்கப்பட்டது அதன் நுட்பங்களை அழகாக விவரனை செய்கிறார். சொந்த கிராமத்திற்கு நகர பேருந்தில் பயணிக்கும் ஆனந்தின் பழைய நினைவுகளின் வழி கதை பயணப்படுகிறது. வாசகர்கள் நகர்ப்புறத்தில் இருந்து கிராமப்புறத்தை நோக்கி அழைத்துச் செல்லும் அழகிய வண்டித்தடமாக கதையின் போக்கு கவனக்குவிப்பு செய்கிறது.
பள்ளிக்காலங்களில் பொங்கல் வாழ்த்து அனுப்பும் குழந்தைகள் அனுபவம், குழந்தைகளின் குடும்பங்களில் ஏற்படும் சண்டைகள் அதை மன்னிக்கும் போக்கு, கடைசியில் முருகையன் உடல்நலம் இல்லாமல் மருத்துவமனையில் அலையும் போது அநாமநேயர் உதவுவது என கதாபாத்திரங்களில் மனித மாண்பை கவனப் படுத்துகிறார்.
நல்ல வாசிப்பு அனுபவத்தை வழங்கிய ஆசிரியருக்கு நன்றிகள்.
வெளியீடு:- ஆம்பல் பதிப்பகம், சென்னை.
ஆசிரியர்:- கனிமொழி செல்லத்துரை
முதற்பதிப்பு:- 2025 - ₹300
கருத்துகள்