கவிதையியல் - வாசிப்பும் விமரிசனமும்
முனைவர் க . பூரணச்சந்திரன்
வெளியீடு:- அடையாளம் - 2013
ISBN 978 81 7720 192 5
பக்கம்:- 144 விலை ₹120
"கவிதை என்பது ஒருவகை விளையாட்டு. அது மொழியின் வாயிலாகத் தன்னை நிகழ்த்திக்கொள்கிறது. எந்த ஒரு விளையாட்டுக்கும் ஆட்ட விதிகள் உண்டு. கவிதை என்னும் கண்ணாமூச்சி ஆட்டத்துக்கான விதிகளைப்பற்றி அரிஸ்டாட்டில், தொல்காப்பியர் முதல் இன்றுவரை, ஏராளமான கோட்பாடுகளும் நடைமுறைகளும் எழுதப்பட்டிருக்கின்றன. அந்த விதிகளின் தொகுப்பில் இக்காலக் கவிதைகளுக்குத் தேவையான சில கருத்துகளையும் பழங்காலக் கவிதைகளை இரசிப்பதற்கும் ஆராய்வதற்குமான சில கருத்துகளையும் முன்வைக்கிறது இந்நூல்.
ஈராயிரம் கால நெடும்பரப்பில் கவிதையும் கவிதையியலும் என்னவாக இருந்தன; எப்படியெல்லாம மாறி வந்திருக்கின்றன என்பது பற்றி இந்த நூல் ஆராய்கிறது. கவிதையைப் பற்றி உலகளாவிய மரபார்ந்த சிந்தனையாளர்கள், நவீனவாதிகள், ருஷ்ய உருவவாதிகள், பிற சிந்தனையாளர்கள் என்னென்ன சொல்லி இருக்கிறார்கள் என்பதை எளிமையான சுவைமிக்க நடையில் எடுத்துரைக்கிறது. இந்த நூல், கவிதை என்றால் என்ன, அதை எப்படி வரையறுக்கலாம், எப்படி எழுதலாம், அதை எப்படி விமர்சிக்கலாம் என்பது குறித்தும் பேசுகிறது. இதனாலேயே இந்நூல் கவிதையை நேசிக்கும் ஒவ்வொருவரின் கையிலும் இருக்க வேண்டிய கையேடாகத் தன்னை நிறுவிக்கொண்டிருக்கிறது" பின்னட்டை வாசகம் நூல் குறித்து நமக்கு அறிமுகம் செய்கிறது.
"இலக்கியத்தின் மிகச் சரியான சுருங்கிய வடிவம் கவிதை"
"கவிதை எல்லாவிதமான அனுபவங்களை யும் - அழகானதோ, அழகற்றதோ, தனித்துவமானதோ, பொது வானதோ, மேன்மையானதோ மேன்மையற்றதோ, நிஜமானதோ, கற்பனையானதோ எல்லாவற்றையும் பற்றியது"
"அனுபவத்தைப்பற்றிச் சொல்வது கவிதையல்ல, நம்மை அந்த அனுபவத்தில் பங்குகொள்ளவைப்பதுதான் கவிதை"
ஒரு நூல், ஒரு மனிதர்மீது உண்டாக்கிய உணர்ச்சி விளைவை தர்க்க ரீதியாக எடுத்துச்சொல்வதே விமரிசனம் ஆகும். விமரிசனம் ஒருபோதும்ஓர் அறிவியலாக முடியாது. ஏனென்றால், முதலில், கவிதை மிகவும் அந்தரங்கமான ஒரு விஷயம். இரண்டாவது, விஞ்ஞானம் புறக்கணிக்கக் கூடிய வாழ்க்கை மதிப்புகளைப் பற்றிப் பேசுவது அது. "கவிதையின் உரைகல் உணர்ச்சியே அன்றிப் பகுத்தறிவன்று".
"யாப்பு பெரும்பாலும் நுட்பமான பணியாற்றுகிறது. தனது நுட்பமான ஒலி நயத்தைத் தரும் பணிக்கும் மேலாக, ஒலி ஆடம்பரமாகத் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளும்போது சந்தம் உருவாகிறது"
"பிற்காலத்தில் பக்தி இயக்கங்கள் விருத்தம் என்ற நாட்டுப்புற பாடல் வடிவங்களைக் நாயன்மார்களும் ஆழ்வார்களும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொருட்டு விருத்தம் என்ற வடிவத்தை இசை வடிவத்தோடு கொண்டு சேர்த்தனர்"
சந்தப்பாக்கள் ஏற்றுவது மிகவும் கடினம், சந்தப்பாவில் கவிதை பொருள் பலியிடப்படுகிறது அதில் அர்த்தம் புரிய தேவையில்லை இது இறைவனை பாடுவது மட்டுமாக இருக்கிறது ஆனால் கவிதை செம்பொருளை நாடுபவர்களுக்கு சந்தப்பா ஏமாற்றத்தை தரும் போது புது வடிவங்கள் பிறக்கிறது . சில பாண்டியர்கள் மட்டும் புழங்கிய வடிவம் மெது மெதுவாக பெரும்பான்மை மக்களை அடையும் போது அது அடையும் மாற்றமே எளிய வடிவங்களாக எல்லோருக்கும் புரியும் வடிவமாக மாறியதை ஆசிரியர் வரலாற்று பூர்வமாக ஆய்வு செய்து விளக்குகிறார்.
பெரும்பான்மை மக்களை புரியும் பொருளாக அமையும் போது வெற்றி பெறுகிறது என்பதாக புதுக்கவிதையின் வரலாற்றை பாரதியாரின் வசன கவிதை சுதந்திரப் போராட்டத்தில் எல்லோரையும் ஈடுபட வைத்த எளிய வடிவத்தை நமக்கு ஆசிரியர் இயங்கியல் போக்கில் தமிழின் தொன்மையான செய்யுள், பாடல், கவிதை, விருத்தம், யாப்பு, தளை, அடி, மற்றும் இன்றைய நவீன இசை பாடல்கள் வரை கவிதையின் வளர்ச்சி போக்கு அறிவியல் வகைப்பட்ட ஆய்வு சிறப்பு.
இவையே இன்றை சமூகத்தில் நாம் படிக்கும் பழைய இலக்கியங்களாக இருந்திருக்கிறது. ஆனால் இன்று பல்வேறு தரப்பினர் தங்களுடைய படைப்பாக்கங்களை கொண்டு வருவது மக்களிடம் கொண்டு சேர்ப்பது என்பது இன்றைய சாத்தியம். இப்படி இலக்கியங்கள் வளர்ந்த வரலாற்றையும் அதன் ஊடாக கவிதைகள் எப்படி செய்யும் சந்தம் பாடல் கவிதை என வளர்ந்து வந்திருக்கிறது என்பதை இந்த நூல் விவரிக்கிறது. ஒரு ஆய்வு கட்டுரை நூலும் கூட.
இப்படி ஆசிரியர் கவிதையை எப்படி எழுதுவது என்கின்ற விளையாட்டை சொல்லி அதனுடைய பண்புகள் முக்கியத்துவம் குறித்து பேசுகிறார். கவிதை செய்யுள் பாட்டு இவைகள் இடையிலான வேறுபாடு ஒற்றுமை அழகுற விளக்குகிறார். எல்லாம் ஒன்றுபோல் தோன்றும் இதை படிக்கும் போது தான் எவ்வளவு வேறுபாடு அதில் எவ்வளவு நுட்பங்கள் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
எழுதுவது மட்டுமல்ல வாசிப்பதிலும் நிறைய முறைகள் இருக்கிறது இல்லையென்றால் அது சுவாரசியம் இல்லாமல் தட்டையான பொருளாக அமைந்து விடும் என்பதை ஆசிரியர் விளக்குகிறார்.
கவிதை வாசிப்பு முறைக்கு மூன்று தலைப்புகளை கொண்டு விளக்குகிறார். மேலும் கவிதையில் இடம் பெறக்கூடிய வடிவம், படிமத்தன்மை, அணிசார் மொழி உருவாக்கம் மேலும் யாப்பு, ஒலிநயம், சந்தம் என அவருடைய பார்வை கூர்ந்து நோக்குகிறார். கவிதையை மதிப்பீடு செய்து, விமர்சனம் செய்வதற்கே தனிப்பட்ட முறைமைகளை பட்டியலிடுகிறார். மிகக்குறைந்த பக்கத்தில் வந்திருக்கக்கூடிய இந்த நூல் கவிஞர்கள், வாசிப்பவர்கள் மற்றும் விமர்சிப்பவர்கள் வைத்திருக்க வேண்டிய ஒரு நூல் என்றால் மிகையில்லை.
சங்க இலக்கியம் அசை, சீர், தளை, அடி இவைகளுக்கு உட்பட்ட அதேநேரம் அரசவைக்கு கட்டுப்பட்ட அன்றைய சமூகத்தின் மையமாக இருந்தது. வழிநடத்திய பெரும் செல்வந்தர்கள் அவர்களுக்கு அணுக்கமான கலாச்சார பாதுகாப்பாளர்கள் அங்கீகரித்தையை இலக்கியங்களாக இருந்திருக்கின்றன. பிறவை அரசுக்கு எதிரானவை முழு முற்றாக இலக்கியமற்றதாக அவை கருதி இடம்பெராமலேயே போயிருக்கிறது. என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
ரஷ்ய இலக்கியங்களின் மதிப்பீடுகளை தூக்கலாக பயன்படுத்தியும், பிற உலக இலக்கியங்களை ஒப்புமை செய்கிறார். உள்ளூர் ஆளுமைகளை ஆங்காங்கு சங்க இலக்கிய முதல் இன்று வரை எடுத்துக்காட்டுகளுடன் கவிதைகளை ஒப்புமை செய்திருக்கிறார் .கவிதையில் புது கவிஞர்களுக்கு தனது சொந்த எழுத்தின் வரலாற்றை புரிந்து கொள்ள உதவும் சிறந்த அறிமுக நூலும் கூட.
பாலச்சந்திரன்