கடந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தின் வேங்கை வயல் கிராமத்தில் பெரும்பான்மை பட்டியல் இன மக்கள் பயன்படுத்தும் குடிநீரில் மலம் கலக்கப்பட்ட நிகழ்வு தமிழ் சமூகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி நமக்கு நாமே வெட்கப்பட வேண்டிய நிகழ்வாக இருந்ததை நாம் எல்லோரும் அறிவோம். பல்வேறு அமைப்புகளின் போராட்டங்கள் காவல்துறையின் விசாரணை என தொடர்ந்து கொண்டிருந்தாலும், இன்று வரையில் அதன் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. கடந்த காலங்களில் அரசு மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் சத்துமாவு கலந்தது என்று அறிக்கை சமர்ப்பித்து இருக்கிறது. இப்படி தொடர்ந்து அரசும் அதிகாரவர்க்கும் இணைந்து இவ்வழக்கின் உண்மைகளை கொண்டு வருவதில் சுணக்கம் காட்டும் இந்த வேளையில், அதே மாவட்டத்தை சேர்ந்த எழுத்தாளர் அண்டனூர் சுரா மனிதர்கள் அல்லாத பிற உயிரினங்களை கொண்டு மீ புனைவாக வேங்கை வெயில் கிராமத்தின் பாகுபாடு அரசியலை பின்புலமாகக் கொண்டு புனையப்பட்ட நாவல்.
அதில் இடம்பெற்று இருக்கும் விலங்குகள், பறவைகள், ஊர்வன, தாவரங்கள், மலைகள், நீர்நிலைகள், மரங்கள், மலர்கள், புற்கள் அப்பகுதி ஆட்சி செய்த மன்னர்கள் என கதை மாந்தர்கள் ஆக்கி அதனுடைய வாழ்வியல் நிலையை பாத்திரப்படைப்பாக படைத்துள்ளார். சங்க இலக்கியத்தின் அறக்கூறுகளை இணைத்து கபிலர், திருக்குறள், அவ்வை, கணியன் பூங்குன்றனார் இப்படி எண்ணற்ற நம்மோடு பரிட்சயமான சங்க இலக்கியங்களில் அறப்பொருள் கொண்டும், அதே நேரம் உயிரினங்களின் பண்பு நலனை கதை மாந்தர்களாக நடமாட விட்டு இருக்கிறார்.
குடிநீரில் அதைக் கலந்தது யார், அந்தக் கலப்பின் பின்னணி என்ன, விசாரணை சரியான போக்கில் சென்றதா, குற்றவாளியைக் காவல்துறையினர் நெருங்கினார்களா, கிடைத்த தடயங்கள் என்னவாயின, அந்தத் துயரத்தை நிகழ்த்தியவன் கைது செய்யப்படுவானா, அரசும் நிர்வாகமும் யார் பக்கம் நிற்கின்றன என்பன போன்ற ஏராளமான கேள்விகள் இந்தச் சம்பவத்தைச் சுற்றி மொய்க்கின்றன. இந்தச் சம்பவத்திற்கு எதிராக, பாதிக்கப் பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும்படியாக, பெரிதாகக் குரல் எழுந்ததா என பல கேள்விகளோடு அதில் அதற்குள்ளாக இருக்கும் சமூகத்தின் சாதிய மதிப்பீடுகள் விலங்கு பறவை பாம்பு என அதன் மீது புனைவாக்கி நமக்கு எதார்த்த நிகழ்வு போக்கை ஆசிரியர் கையாளும் பங்கு தமிழ் வாசகர்களுக்கு புதிது.
வேங்குடிவயல் எனும் இப்புதினம் வாசகப் பரப்பிற்கு வந்திருக்கிறது. இது வெறும் கதையோ சம்பவங்களின் தொகுப்போ அல்ல. இக்கதைக்குள் நாம் இருக்கிறோம். எதுவாக இருக்கிறோம், என்ன வகையான முகமூடியை அணிந்திருக்கிறோம் என்பதை இந்நாவலின் பாத்திரங்கள் நமக்கு உணர்த்துவது மூலம் சமூகத்தில் நடக்கும் அவலங்களை மௌனமாக பார்ப்பது கூட குற்றமாகி நமது எதிர்கால சந்ததியை எப்படி பாதிக்கும் என்பதை ஆசிரியர் உரைக்கிறார்.
பழக்கப்பட்ட மனிதர் கதை மாந்தராக இல்லாமல் மனித குணங்களை பூச்சி, பட்சி, பறவை, விலங்கு, எறும்பு, சிட்டு, மரம், பூ இவற்றைக்கொண்டு பெரும் சம்பவத்தைப் பல கோணத்தில் அணுகியுள்ளார். இந்நாவலில் பாத்திரங்களாக வரும் தொட்டாச்சிணுங்கி, அணில், நத்தை, மீன்கள் போன்றன யாவும் வெறும் வாழ்விகள் அல்ல. புலி, ஆமை, கொக்கு, பாம்பு, யானை இவர்களெல்லாம் யாரென்றும் சாதியப் படிக்கட்டில் இவர்கள் யாராக இருக்கிறார்கள்.
இக்கதையின் மாந்தர்களின் பெயர்கள் அவர்களுடைய நடவடிக்கையை ஏற்ற மாதிரி உருவகங்களை இந்த கதையில் மிகப்பெரிய பங்களிப்பு செய்கிறது
"பனமபூக்களைப் போல் மிதந்தன"
காட்சி படிமம் சிறப்பு
"ஆட்சி என்பது, செய்வதோ அதிகாரம் செலுத்துவது அல்ல; கையாளுதல்..." அரசியல் பேசுகிறது. ஒடுக்கப்படும் விளிம்பு நிலை மக்களின் உலக்கிடக்கையாக இன்றும் என்றும் எரிந்து கொண்டிருக்கும்
"தீ வைத்தவர்களை மன்னித்து விட்டோம், ஆனால் மறக்க மாட்டோம்."
வரலாற்றின் ஆராத தழும்புகள் என்றேனும் ஒரு நாள், பழி தீர்க்கும் என்பதை கதை மாந்தராக ஆசிரியர் பேசுகிறார்.
"பாதிக்கப்பட்ட அணில்களுக்கு நீதி கிடைக்காமல் சமாதானம் கொள்வது, அநீதியை அடுத்த தலைமுறைக்கு கடத்துவது"
சமாதானம் எளிய மக்களை ஏமாற்றும் தந்திர உபாயம் என்பதை ஆசிரியர் கதை மாந்தர் வழியாக அரசியல் உரைக்கிறார்.
"புனிதப்படுத்துதல் என்பது ஆகப்பெரிய ஏமாற்று வேலை. கலங்கத்தை துடைக்க ஒரே வழி அந்த களங்கத்தின் மீது மன்னிப்பு கேட்பதுதான். அதை விடுத்து புனித படுத்துதல் என்பது நாம் அறிவுக்கு ஒவ்வாத விஷயம்." எப்படி வலுவானவர்கள் விளிம்பு நிலை மக்களை தந்திரமாக ஏமாற்றுவார்கள் என கட்டுகிறார். இப்படியாக நாவல் முழுவதும் திரை மறைவாக சமூக நீதி அரசியலை பேசுகிறது.
பொதுவாக மீ புனைவு நாவல்கள் எனில் ஆசிரியரின் மனக்கிடகைகளை புனைவாக எழுதுவதாகவே இருக்கும். ஆனால் நடப்பு கால அரசியலை சங்க இலக்கியத்தின் துணைக்கொண்டு மனிதகளை கதை மாந்தர்கள் ஆக்காமல், அவனை சூழ்ந்த சுற்றுச்சூழலை கதாபாத்திரங்களாக படைத்து, பொது சமூகத்துக்கு அது ஆற்றும் பணியும் அதை மனிதன் சீரழிக்கும் விதத்தையும் கதை களமாக்கி உள்ளார்.
சமூகத்தின் ஊழ், துரோகம் மற்றும் அறியாமை எப்படி மனிதனின் நாசம் செய்கிறது என்பதையும் நாவலின் மையப் புள்ளியாக உருவாக படுத்திருக்கிறார் ஆசிரியர். மனித மனங்களில் படுத்திருக்கும் படிநிலை வெறுப்பு அசடுகளை சாட்டையடி கொடுக்கும் அரசியல் புதினம். வரலாற்று நெடுகிலும் அரசும் ஆளுவர்க்கமும் பெரும்பான்மை விளிம்பு நிலை மக்களை எவ்வாறு லாபகமாக ஏமாற்றுகிறது என்பதை வெட்ட வெளிச்சமாக்கும் மீ புனைவு புதினம். என் அளவில் தமிழ் வாசகர்களுக்கு புதிய வகைப்பட்ட வாசிப்பு நுகர்வை வழங்கி இருக்கிறது என்றால் அது மிகையல்ல.
வேங்குடிவயல்
ஆசிரியர்: அண்டனூர் சுரா
வகை : மீ புனைவு புதினம்
சிறப்பு: இராம. செ. சுப்பையா அறக்கட்டளை நடத்திய 2024 ஆம் ஆண்டில் புதின போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றது.
பதிப்பகம்: நாற்கரம் - 2024
பக்கம் - 172 , ₹- 220
- ஒட்டடை பாலச்சந்திரன் -
ottadaibala blogspot.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக