சுரங்கப்பாதையில் ஒரு ஓவியம் - நாவல் அறிமுகம்
சுரங்கப்பாதையில் ஒரு ஓவியம்
பாலஜோதி இராமச்சந்திரன்
வகைமை ; புதினம்
சிறப்பு; இராம. செ. சுப்பையா நினைவு அறக்கட்டளை 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பரிசு
வெளியீடு; நாற்கரம் ₹170 - பக்கம் 140
எளிய மனிதர்களை அன்றாடம் நாம் கடந்து போகிறோம் அவர்களின் அந்தந்த நேரத்து நியாயங்களை அதற்குப்பின் ஒளிந்திருக்க கூடிய எளிய சமூக உளவியல் போக்குகளை எதார்த்த மாகவும் அதன் தர்க நியங்களை உரையாடலாக நம்மிடையே கடத்தும் கதை.
கதையின் மையப் போக்கு எளிய உழைக்கு விளிம்பு நிலை மனிதர்களின் பழைய விழுமியங்களில் மீதான சமகால பொருளாதார அழுத்தங்கள் அவர்களை வேறொரு தளத்துக்கு மிக எளிதாக ஜனநாயகப்படுத்துவதும் அதை புரிந்து கொள்ளவும், அதன் வழி சக மனிதர்களின் அழகியலை பேசும் புதினம். எளிய மனிதர்களின் பின்தங்கிய பண்பாட்டுச் சூழலில், சூதற்ற அன்றாடம் உழைக்கும் மக்களின் கடைபிடிக்க முடியாத பழைய விழுமியங்களில் இருந்து நழுவும் உழைக்கும் மக்களின் உதிரி போக்குகளின் அங்கீகரிப்பை அவர்கள் வழி வாழ்வை பேசும் புதினமாக இருக்கிறது.
இந்த சமூகத்தின் பாதுகாப்பாக கருதப்படும் வீடு உறவு கல்வி ரேஷன் கார்டு ஆதார் கார்டு ஓட்டர் ஐடி என எதுவும் இல்லாத பலரும் பெருநகர சாலைகளில் குடும்பமாக அல்லது தனியாகவோ வாழ்வதை நாம் அறிவோம். அவர்கள் இந்த நாட்டில் குடிமக்கள் தானா? பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறார்கள்? இப்படி பல கேள்விகள் நம்மை கடந்து போவதுண்டு? சென்னை போன்ற பெருநகர பகுதிகளில் சுரங்கப்பாதையில் வியாபாரிகள் அவர்களுடைய பல்வேறு போக்குகள் உளவியல் பார்த்தவாறு நாம் வேக வேகமாக கணநேரம் கவலைப்பட்டு பிறகு வேறு ஒரு விஷயங்கள் நம்மை நிரப்பி கொள்ள இக் காட்சிகள் சாதாரண அன்றாட நிகழ்வுகளாக மாறிவிடும். இப்படி மரத்து போய் கடந்து போகும் வாழ்வின் அங்கத்தை ஒரு கணம் யோசிக்க வைக்கச் செய்கிறது. கடந்து போகும் போது தன்னை ஈர்த்த கதாபாத்திரங்களின் வழியே எழுத்தாளர் சமூகத்தை அணுகும் விதம் நாவலாக.
ஆங்காங்கே தூவல்களாக அரசியல் பேசும் இந்த நாவல், பெரும்பாலும் கெட்டி தட்டிப் போன அந்தரங்கத்தின் மறைவை பொது வெளியில் வைத்து ஜனநாயகத்தை பேசக்கூடியதாக உள்ளது. மனித உணர்வுகளை, உறவுகளை, காதலை கண்ணியத்தையும் அணுகுகிறது. ஒரே மூச்சில் படிக்கும் உரையாடல் போக்கு சிறப்பு.
எழுத்தாளர், தேவகி, மணி, ஓனர் என மனித கதாபாத்திரங்களும் கிண்டி சுரங்கப்பாதையை, வேகமாக கடந்து போகும் மனிதர்கள், பேருந்துகள், ரயில், லாட்ஜ், வாட்ச்மேன், பார், ஓவியம் ஹோட்டல், சென்னை வாழ் மக்கள் மொழி, என எல்லாம் கதாபாத்திரங்களாக. பழைய விழுமியங்களை மெதுவாக மீறும் இயல்புகளை புதினத்தினை வேகமாக மெருகூட்டி முடிகிறது.
நினைவில் நிறுத்தக்கூடிய செய்தியை இந்த நாவல் சொல்லவில்லை. அன்றாட நாம் சந்திக்கும் தர்க்க நியாயங்கள் மீதான விசாரணையை மட்டும் செய்வதால், பேருந்து பயணத்தின் போது ஒரு அழகிய குழந்தையின் சேஷ்டையில் மயங்கி இறங்கிய பிறகு அது யாரோ நான் யாரோ என்று போவது போலவே இந்த புதினத்தை படிக்கும் போது விறுவிறுன்னு முடிந்து பிறகு நல்ல அனுபவத்தோடு கடந்துவிட்ட கதை.
நவீனத்தின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களின் வாயிலாக உரையாடலை நடத்தி அதன் வழி நமக்கு சில சந்தேகங்களையும் அதன் முடிவுகளை நம்மிடமே விட்டுச் செல்லும் எழுத்தாளரின் யுக்தி என் போன்றவருக்கு புதுசு. எளிய மக்களின் உறவுகள் மிக வெளிப்படையாக எதார்த்தமாக பொருந்தி போகக் கூடிய காட்சி படிமங்கள் அதிகம். அந்த வகையில் ஒரு படித்ததும் நினைவில் இல்லாமல் போகும் கதை, ஆனால் படிக்கும் போது சுவாரசியமாக...
ஒரு பெண்ணைச் சுற்றி காதல் காமம் நட்பு என மூன்று கோணங்களில் ஆண்களின் இயல்புகளை நான்காவது கண் வழியாக சமூகமாக இருந்து எழுத்தாளரின் திட்டமிட்ட ஓவியப் பாணியும் அதை எட்டு அத்தியாயங்களாக, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அத்தியாயம் என ஒரு ஒரு வார காதலே கதை என்றாலும் சுவாரசியம் குன்றாத போக்கு.
சென்னையின் சுரங்கப்பாதை அழகியலை, பார்வை அனுபவமாக வாசிக்க வழங்கிய எழுத்தாளருக்கு பெருவாரியான வாழ்த்துக்கள்.
ஒட்டடை பாலச்சந்திரன்
கருத்துகள்