அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி. நட்டம் அதிமுகவுக்கே...
"வேண்டா வெறுப்புக்கு புள்ளைய பெத்து, காண்டாமிருகம் பெயர் வைத்தாள்."
என்ற சொலவடை நாம் அறிந்த ஒன்றுதான். அதிமுக பாஜக கூட்டணியால் நட்டம் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் தமிழகத்திற்கும் முற்போக்கு ஜனநாயக சக்திகளுக்கும் தான். எப்படி பார்த்தாலும் லாபம் பாஜகவுக்கு மட்டும். பாஜகவோடு யார் உறவு வைத்தாலும் அவர்களை கபாலிகரம் செய்து விடுவார்கள். இந்த முறை திமுகவையும் அதிமுகவை சேர்த்து சிதைத்து விடுவார்கள் என்கின்ற அச்சம் ஒரு ஓரத்தில் வரத்தான் செய்கிறது.
கடந்த 10 நாட்களாக செங்கோட்டையனை வைத்து எடப்பாடியை அசைத்து விட்டார் சந்தான பாரதி.. கண்துடைப்பு நாடகத்தில் அண்ணாமலை பலியாக்கி, அதிமுகவின் முன்னாள் நிர்வாகியை பொறுப்பாளராகி புதிய கோணத்தில் அடுரா ராமா என்று ஆட்டி வைக்கப் போகிறார் அதிமுகவை... மக்களிடம் அதிருப்தி ஆளுங்கட்சி திமுகவும் அதன் கூட்டணி கட்சிகள் என்ன செய்யப் போகிறது ?
(நான் என்ன செய்வது?)
சமீபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் 24 ஆவது தேசிய மாநாட்டை முடித்திருக்கிறது. அதனுடைய வரைவு அறிக்கையில் இன்றைய ஆளும் மத்திய அரசு பாசிச பண்பு கொண்டது அறுதி இட்டு சொல்லவில்லை என்று விமர்சனங்கள் பிற இடதுசாரி கட்சிகளும், ஜனநாயக கட்சிகலும், தனிமனிதர்களாலும் ஏகத்துக்கும் விமர்சிக்கப்பட்டது. மதுரை மாநாடு மிகவும் சிறப்புடன் திட்டமிட்டு சிபிஎம் ஆதரவில் இயங்கும் வர்க்க, வெகுஜன அமைப்புகளின் கடைசித் தொண்டன் வரை பங்கு பெற்ற வேலை நடை, தமிழகத்திலும் குறிப்பாக மதுரையிலும் மக்கள் செல்வாக்கில் திளைத்ததை மறுப்பதற்கு இல்லை. கம்யூனிஸ்டு கட்சிகள் மேலிருந்து கீழாக கட்டப்படுபவை. அந்த வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு வெற்றி அடைவதற்கு திட்டமிட்ட சீரிய முயற்சி அவர்கள் எதிர்பார்த்ததை விட கூடுதல் பலனை அளித்திருக்கிறது. பிற இடதுசாரி கட்சிகளின் தோழர்களுக்கும் அதில் பெருமிதமும் பரவசத்தைக்ஷயும் நம்மால் உணர முடிந்தது.
வரைவு அறிக்கையில் பாசிசம் என்ற சொல்லாடலை இலை மறை காயாக பயன்படுத்தியது திருத்தம் செய்யப்பட்டு இப்போது நவ பாசிசம் என்ற பதத்தை பயன்படுத்தி உள்ளனர். இதுகுறித்தும் நிறைய விமர்சனங்கள் ,சமூக ஊடகங்களில் ஆங்காங்கே காண முடிந்தது. அவர்கள் எதை சொல்லிட்டு போகட்டும் அது வெறும் ஏட்டுச் சுரக்காயே. நடப்பில் பாசிச பண்பை எப்படி புரிந்து கொள்வது, அதற்கு எதிரானவர்களை எப்படி ஓரணியில் திரட்டுவது, சொந்த அமைப்பை முழு முற்றாக எப்படி பயன்படுத்துவது என்கின்ற நிலையிலிருந்து அணுகும் போது, ஆளுகின்ற பாசிச அரசின் போக்குகளின் மீது எவ்வாறு வினையாற்றுகிறோம் என்பதை பொறுத்து நமது பழைய கருத்துக்கள் மதிப்பீடுகள் நொறுங்கிப் போகும். அன்றைய சூழலில் எது உகந்ததோ அதையே கடைப்பிடிப்போம். அதுதான் ஒரு வரலாற்று பொருள் முதல் வாதத்தை புரிந்து கொண்ட இயங்கியல் வகைப்பட்ட அரசியல் நிலைப்பாடாக இருக்கும். சக கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அது பொருந்தும்.
என் அளவில் தமிழகம் கேரளா கர்நாடகா ஆந்திரா மேற்கு வங்கம் திரிபுரா இப்படி இந்தி பேசாத மாநிலங்களில் இடதுசாரி கட்சிகள் வலுவாக இருக்கிறார்கள். அவர்கள் ஜனநாயகத்தை வலுப்படுத்துகிறார்கள். மக்களை அரசியல் படுத்துகிறார்கள். வலதுசாரி பாசிசவாதிகளை அடையாளப்படுத்தி மக்களை பயிற்றுவிக்கிறார்கள். பிற இடதுசாரி கட்சிகள் தீர்மானிக்கும் சக்தியாக இல்லை என்பது தான் எதார்த்தம். ஆனால் அவர்கள் சிபிஎம்மில் பாசிச கோட்டு வரைவு அறிக்கையை மீது கடுமையாக விமர்சனம் வைக்கிறார்கள்.
ஏடுகளைக் காட்டிலும் எதார்த்தம் அதையும் தாண்டி வினை புரியும். ஜனநாயகத்தையும், விஞ்ஞான சோசலிசத்தை அடிப்படைக் கோட்பாடாக கொண்ட இடதுசாரிகள் ஏடுகளில் எழுதப்பட்ட எழுத்துக்களில் புதைந்து போகாமல் எதார்த்தத்தில் தன்னை பொருத்திக் கொள்வார்கள். இது மார்க்சிஸ்ட் கட்சியையும் விடாது, நம்மையும் விடாது இருவரும் இணைந்தும் - பிற இடதுசாரி ஜனநாயக சக்திகளை இணைத்துக் கொண்டு பாசிசத்தை எதிர்க்க வேண்டிய சூழல் ஏற்படும்போது எல்லாம் தவிடு பொடியாக்கி ஓரணியில் நிற்க வேண்டிய நிர்ப்பந்தம் வந்துவிடும். வரலாற்று நெடுகிலும் பாசிசமுமோ, நவபாசிசமோ அதன் மூர்க்கத்தனம் நம்மை இயல்பாக கூட்டமைப்பு போரிட செய்துவிடுகிறது. நவ பாசிசத்திற்கு அவர்கள் எப்படி வேணாலும் விளக்கம் கொடுக்கட்டும். எதார்த்தம் அவர்களை எங்கு நிப்பாட்டும் என்பது நாம் அறிந்தது. சரியான முடிவு எடுக்கவில்லை என்றால் காலம் அவர்களையும் அப்புறப்படுத்தும். அப்போது அவர்கள் எந்த விளக்கமும் செல்லுபடி ஆகாது. நாமும் விளக்கத்தின் மீது விளக்கு பிடிக்காமல் எதார்த்தத்தில் இணைந்து கொள்வோம்.
ஆக என்ன சொல்ல வர்றேன்னா? வேண்டா வெறுப்பாக பெற்றுக் கொண்ட பிள்ளை பின்னொரு நாளில் தன் தாயை சிறப்புற பார்த்துக் கொண்டால் காண்டாமிருகம் என்ற பெயர் என்பதாலே ஒதுக்கி தள்ளி விடுவோமா! ஆக பேரைப் பிடித்து தூங்கிக் கொண்டிருக்காமல்... முன்னேறுவோம்.
நமது உள்துறை அமைச்சர் சந்தான பாரதி எடப்பாடியை செரித்து தன்வயமாக்கிட குருமூர்த்தியுடன் வலதுசாரி திட்டமிடுதலை செய்துவிட்டார். ஆளுங்கட்சி எதிர்ப்பலை கண்டிப்பாக பாஜக கூட்டணிக்கு சாதகமாகவே இருக்கும். எனவே ஆபத்தை உணர்ந்து தீயா வேலை செய்ய வேண்டி இருக்கும் நேரத்தில், இப்படி குறுக்க மறுக்க ஓடுவது பொருத்தமற்ற ஒன்று. காண்டாமிருகம் என்ற பெயர் ஒன்றும் பிரச்சனை அல்ல, நல்ல பிள்ளையாக நடந்து கொள்வது தான் நமக்குத் தேவை. பேரு வைத்ததனாலே ஒதுக்கி விடாமல் அவர்களை சரியான நோக்கத்தோடு அணுகி சரி கட்ட கூடிய சில சகிப்புத்தன்மைகளை புரிந்து இணைந்து பயணிப்பதே எதார்த்தம்.
தமிழகத்தின் சமூக நீதி அரசியலை சனாதனத்தைக் கொண்டு தூம்சம் செய்ய திட்டம் தீட்டி விட்டார்கள். அண்ணாமலை நீக்கத்தை பற்றி எல்லோரும் சிலாகித்து பகடி செய்து கொண்டிருக்கிறார்கள். பாசிச சனாதனத்துக்கு மனிதன் கருவி மட்டுமே. அண்ணாமலை மாறலாம் ஆனால் அதன் காரண காரியங்கள் ஒருபோதும் மாறாது. இன்னும் கூராக ஸ்துலமாக வேலை செய்யும். வாக்குகளை தக்க வைக்க ஆளுங்கட்சி பலவீனங்களை களைந்து கொள்வதுமே அவசியமாக இருக்கிறது. நவ பாசிசம், நவீன பாசிசம் என்று நமக்குள் உள்ளடி வேலைகளை ஓரங்கட்டி வைத்துவிட்டு, அவர்கள் அதிமுகவை கபிலிகரம் செய்யப் போகிறார்கள். அதிமுக கடந்த காலங்களில் சமூக நீதியை தனது கோட்பாடாக கொண்டதுதான். அதையும் கவலிகரம் செய்கிறது ஆர் எஸ் எஸ். எனவே பாசிச அதிமுக பாஜக கூட்டணியை எதிர்த்து சமூக நீதியை பாதுகாக்க முயல்வதே பொருத்தமான புரிதல். ஆளுங்கட்சி எதிர்ப்பு மனோநிலை பாஜகவுக்கு சாதகமாக அமையும் என்கின்ற பதட்டம் என்னிடம். நையாண்டிகளால் அதை கடந்து விட முடியாது. சந்ததியை நாசம் செய்யும் ஏற்பாடு சனாதனம்.
எடப்பாடி தலைமையில் கூட்டணி என்று அமித்ஷா சொன்னார். தமிழ் சினிமாவில் வரும் மிக்சர் தின்று கொண்டிருக்கும் கணவனின் நிலையில் எடப்பாடி...
ஆக அதிமுக... இனி அமித்ஷா வசம். (உள்துறை அமைச்சர் வந்தார் - பாஜக தேசியத் தலைவர் நட்டா சிங் எங்கே?)
கருத்துகள்