அண்ணல் அம்பேத்கர் ஆக்கங்கள்
அடடா அருமையான மொழிபெயர்ப்பு. வேகமாக நகர்கிறது அம்பேத்கர் ஆக்கங்கள். முற்போக்கு இலக்கியங்கள் பரவலாக சென்றடையாமல் போனதற்கு முக்கிய காரணிகளில் மொழிபெயர்ப்பும் ஒன்று. பலமுறை அம்பேத்கரின் நூல்களை படிக்கும் போது ரஷ்யாவில் இருந்து மலிவுலை பதிப்பாக ராதுகா பதிப்பகத்தின் நூல்களை, இரண்டு பக்கங்களை படித்து முடிப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும் .
அம்பேத்கர் நூலும் விதிவிலக்கல்ல. தட்டையான நேரடி மொழிபெயர்ப்பும், மராத்தியிலிருந்து ஆங்கில வழியாக தமிழுக்கு மொழி பெயர்த்ததும் தட்டையாகவே இருந்தது. பெரிய பராக்களாக படிக்கும்போது சோர்வாகவும் முழு பொருளை நினைவில் நிற்காமல் மறந்து விடும் உண்டு. கடந்த முறை அச்சிடப்பட்ட நீல அட்டை போட்ட கனத்த நூல்கள் கூட இந்த வகையினமே. பெரியார் தாசன் சித்தார்த்தன் என்ற புனைப்பெயரில் மொழிபெயர்த்த தாய்லாந்து பௌத்த சொசைட்டி உதவியுடன் வெளிவந்த 'தம்மம்' ஒரே மூச்சியில் படித்த நூல். அதேபோல ஆர் எஸ் சர்மா எழுதிய சூத்திரர்கள் கொஞ்சம் கொஞ்சமாக படித்து முழுமை பெற்ற நூல். பிற அம்பேத்கர் நூலையும் நான் முழுதாக படிக்கவே இல்லை. அதிகபட்சம் 10 பக்கங்களுக்கு மேல் என்னால் ஒரு முறை படிக்க முடிந்ததில்லை. இதுவரையிலும் அரைகுறையாகவே கடக்கிறேன்.
இந்த முறை தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகமும் இணைந்து மக்கள் பதிப்பாக அண்ணல் அம்பேத்கரின் ஆக்கங்கள் என்ற பெயரில் நூறு தொகுதிகளில் முதல் பத்து தொகுதிகளை வெளியிட்டு உள்ளது. 300 பக்கங்கள் கொண்ட ஒவ்வொரு நூலும் பத்து நூல்களாக ரூபாய் ஆயிரத்திற்கு கிடைக்கிறது. சமூக நீதியை பேசக்கூடிய இன்றைய தமிழக அரசு, முற்போக்கு இலக்கியங்களை பதிப்பிக்கும் நிறுவனமும் இணைந்து கூடுதலாக மொழிபெயர்ப்பு செய்திருக்கக் கூடிய சென்னை பல்கலைக்கழக முன்னால் தமிழ் துறை தலைவர் வீ. அரசு, செந்தலை கௌதமன் போன்ற பொறுப்பு மிக்க ஆளுமைகள் பங்கேற்புடன் வெளிவந்திருக்க கூடிய அருமையான ஆக்கம்.
பல்வேறு மொழிக் கலப்புகளோடு தட்டையான மொழிபெயர்ப்பை கடந்து இன்றைய தமிழில், கலைச்சொற்கள் நிறைய இடம்பெற்று பல்வேறு குறிப்பு, அட்டவணை, உதவிய நூல்கள், விளக்க படங்களுடன் ,துணை தலைப்புகளுடன் வந்திருக்கக்கூடிய அருமையான ஆக்கம். 40 நிமிடங்கள் தொடர்ச்சியாக ஏறக்குறைய 70 பக்கங்கள் படிக்கச் செய்தும், அறிந்து கொள்ளும் ஆர்வத்தை உருவாக்கிய மொழி பெயர்ப்பு. என் அளவில் தமிழக அரசு வெளியிட்டுள்ள இந்த தொகுப்பு உண்மையில் பழைய பதிப்பு போல் இல்லாமல் அதிகம் வாசிக்கவும் அது குறித்து புரிதலை பகிர்ந்து கொள்ளவும் அதன் வழி அம்பேத்கரின் ஆக்கங்கள் பரவலாகும். சமூக நீதியை புதிய தளத்திற்கு எல்லோரும் புரிந்துகொள்ள வண்ணம் உருவாக்கும். பழைய நீல அட்டையில் பதிப்பிக்கப்பட்ட துணை தலைப்புகள் அற்ற பெரிய நூல்கள் இனி காட்சி பொருளாகி, இது அதிகம் புழக்கத்தில் மணி பிரவள நடை மறைந்து, நல்ல தமிழில் புழங்கும். என்பது மிகையல்ல.
நேரடியாக பத்தாவது தொகுதி படிக்கிறேன். ஆழமான ஆய்வு அம்பேத்கரின் பல்வேறு தொகுப்புகளில் இருந்து, ஒரு தலைப்பின் கீழ் அவைகளை ஒருங்கிணைத்திருப்பது சிறப்பு. முன்னட்டையில் துணை தலைப்புகளை அச்சிட்டு தேடுதல் பணியை குறைத்த தமிழக அரசுக்கு அன்பும் நன்றியும்.
கருத்துகள்