பாசிசம் ஒரு விவாதம்

இந்தியாவில் தற்போது அரசியல் பண்பாட்டுத் தளங்களில் மேலாதிக்கம் பெற்றுள்ள பாசிசம் எத்தகைய தன்மைகளைக் கொண்டதாக இருக்கிறது என்பதை நாம் நுட்பமாக ஆராய்ந்து புரிந்துகொள்ள வேண்டும். அதற்குப் பாசிசம் குறித்த அண்மைக்கால ஆய்வுகள் நமக்குப் பயன்படும்.

பாசிச அரசை நிறுவுவதில் கருத்தியல்சார் அரசு சாதனங்கள் (Ideological State Apparatuses) முதன்மையான பாத்திரத்தை வகிக்கின்றன. அவை அடக்குமுறைசார் அரசு गान (Repressive State Apparatuses) போலிஸ் , ராணுவம் முதலானவற்றிலிருந்து விலகிச் சுயேச்சையாகச் செயல்படுகின்றன. பாசிசத்தின் பிடியிலிருந்து அடக்குமுறைசார் அரசு சாதனங்களை விடுவித்தால் அது கருத்தியல்சார் அரசு சாதனங்களில் பதுங்கிக்கொண்டு மீண்டும் அடக்குமுறைசார் அரசு சாதனங்களைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும். அங்கே தனது பணியைத் தொடர்ந்து செய்யும்.

1970களின் பின்பகுதியில் ஜனதா ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் அரசாங்கத்தைக் கையாளும் ஆட்சி அதிகாரத்துக்குள் ஊடுருவிய பாசிஸ்டுகள், ஆட்சி அதிகாரம் போன பிறகு சிவில் சமூகம் எனப்படும் கல்வி, குடும்பம், ஊடகம், சமயம், அரசியல் கட்சிகள் முதலான கருத்தியல்சார் அரசு சாதனங்களில் தமது நடவடிக்கைகளை விரிவுபடுத்தினர். சுமார் இருபது ஆண்டுகளில் அடக்குமுறைசார் அரசு சாதனங்களைச் சுயேச்சையாகக் கைப்பற்றும் அளவுக்கு வளர்ச்சி பெற்றனர்.

இப்போது பாசிசம் பற்றிப் பேசுகிற பலரும் தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதிலிருந்து பாஜகவைத் தடுத்துவிட்டாலே பாசிச அபாயம் நீங்கிவிடும் எனக் கருதுவதுபோல் தெரிகிறது.

இது மேம்போக்கான புரிதலேயாகும். இன்று கருத்தியல்சார் அரசு சாதனங்களில் வகுப்புவாதத்தின் மேலாதிக்கம் வலுவாக நிறுவப்பட்டுள்ளது. அதை அகற்றாமல் பாசிச ஆபத்தை முற்றாக நீக்கிவிட முடியாது.

"வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்கும் அமைப்புகளும், புரட்சிகர அமைப்புகளும்தான் கருத்தியல்சார் அரசு நிறுவனங்களாக மாறாமல் தப்பிக்க முடியும்" என நிகோஸ் பெளலண்ட்சாஸ் கூறுகிறார் (பக்கம் 308) "எப்படி இந்த அமைப்புகளை உருவாக்குவது, இலக்குகளை நோக்கிச் செலுத்துவது, கருத்தியல்சார் அரசு சாதனங்களின் பிடியை உடைப்பதோடு தான் அதற்குள் நழுவி விழுந்துவிடாமல் எப்படிப் பார்த்துக்கொள்வது என்பதைப் பற்றிய புரிதல் இதற்குத் தேவை" எனக் கூறுகிறார் பெளலண்ட்சாஸ்.

பாசிசம் ஒரு நாட்டில் மேலாதிக்கம் பெற்றுவிட்டதன் அடையாளம் அடக்குமுறையும் கணக்கற்ற உயிரிழப்புகளும் மட்டுமல்ல. மக்கள் எப்போது புனைவுக்கும் யதார்த்தத்துக்குமான வித்தியாசத்தைப் பார்க்கத் தவறுகிறார்களோ, எப்போது பொய்க்கும் உண்மைக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை என நம்ப ஆரம்பிக்கிறார்களோ அதுவும் பாசிசத்தின் அடையாளம்தான். அது ஒருநாளில் நிறுவப்படுவதில்லை. சமூகத்தின் நனவிலியில் கொஞ்சம் கொஞ்சமாக அந்த மாற்றம் நிகழ்கிறது. மறுக்கப்படாத பொய்கள் அந்த நிலையை நோக்கி சமூகத்தை உந்துகிறது.

அம்பர்ட்டோ எக்கோ என்ற சிந்தனையாளர் பாசிசத்தின் அடையாளங்கள் என்று சிலவற்றைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். மரபை வழிபடுதல் என்பது பாசிசத்தின் ஒரு அடையாளம் என்கிறார். உண்மை என்பது ஏற்கெனவே சொல்லப்பட்டு விட்டது நாம் அதற்கான வியாக்கியானங்களை மட்டுமே கொடுக்க முடியும் என்பது இதன் வாதம். சனாதனம் என்பது அதுதான்.

நவீனத்துவத்தை நிராகரித்தல் என்பதை இன்னொரு அடையாளமாக அவர் குறிப்பிடுகிறார். புத்தொளிக்காலம் (Enlightment) என்றும் பகுத்தறிவின் யுகம் (Age of reason) என்றும் சொல்லப்படுகிற நவீனத்துவக் காலத்தை நிராகரிப்பது,நவீனத்துவம் என்றாலே அது பூர்ஷ்வா வாழ்க்கைமுறை என்று கொச்சைப்படுத்துவது, பகுத்தறிவுக்கு எதிரான மூடத்தனங்களைக் கொண்டாடுவது இதன் பண்பாகும். இன அடிப்படையில் சில சமூகக் குழுக்களை அந்நியர்களாகக் கட்டமைப்பது அவர்களே நம் எதிரிகள் என்று சொல்லுவது பாசிசத்தின் இன்னொரு அடையாளம் என்று அவர் சொல்கிறார். தேசியத்தைக் கட்டமைப்பதற்கு முதலில் எதிரிகளை அடையாளப்படுத்துவது இதன் ஒரு பண்பாகும். மத்தியத் தரவர்க்கத்தைத் தன்னுடைய கருத்தியல் மேலாதிக்கத்துக்குள் பாசிசம் கொண்டு வரும் என்கிறார் எக்கோ. பாராளுமன்ற ஜனநாயக முறையைப் பாசிசம் விரும்புவதில்லை. அதன் மீது தொடர்ந்து சந்தேகத்தை எழுப்புவது, ஜனநாயகம் அல்லாத வழிமுறைகளைப் பின்பற்றுவது பாசிசத்தின் குணாம்சமாகும். விமர்சனப் பூர்வமான பார்வையைப் பாசிசம் எதிராகப் பார்க்கிறது. பள்ளிப் பாடநூல்களைத் தன்னுடைய நோக்கத்துக்கு அது பயன்படுத்தி, இளைய சமுதாயத்தினரிடையே விமர்சனத் தன்மை அற்ற கீழ்ப்படிதலை ஊக்குவிப்பது- இதுவும் பாசிசத்தின் குணம்தான் என்று அவர் குறிப்பிடுகிறார்.

பாசிசமானது தன்னை ஆபத்தில்லாத வெகுளியாகக் காட்டிக் கொண்டு மக்களை ஈர்க்க முயல்கிறது. அதன் உள்ளார்ந்த நோக்கங்களைத் தொடர்ந்து அம்பலப்படுத்துவது அவசியம் என்று அவர் குறிப்பிடுகிறார். அம்பர்த்தோ எக்கோ குறிப்பிட்டிருக்கிற எல்லா அம்சங்களுமே இந்தியாவில் இப்போது காணக்கூடியவையாக இருக்கின்றன. எனவே இந்தியாவில் நிலவுவது பாசிசச் சூழல்தான் என்பதில் எந்தவொரு ஐயமும் இல்லை

இந்தியப் பாசிசத்தைப் புரிந்துகொள்ள வகுப்புவாதத்தை மட்டுமே ஆராய்ந்தால் போதாது. கும்பலாட்சி (Mobocracy) ஜனரஞ்சக வாதம் (Populism) முதலானவற்றுக்கும் பாசிசத்துக்கும் இடையிலான உறவையும் பார்க்க வேண்டும். தற்போதுள்ள அரசியல் கட்சிகளில் பாசிசம் எவ்வாறு ஊடுருவி அவற்றைத் தன்வயப்படுத்தியுள்ளது என்பதையும் நாம் நுணுகிப் பார்க்கவேண்டும். அப்போதுதான் பாசிசத்தின் பிடிக்கு ஆட்படாத, கருத்தியல்சார் அரசு சாதனமாக மாறாத ஓர் அமைப்பு எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை உணரமுடியும். சிபிஐ (எம்) கட்சியின் அகில இந்திய காங்கிரஸில் நிறைவேற்றுவதற்கான வரைவுத் தீர்மானங்களில் ஒன்றாகப் பாசிசம் குறித்த தீர்மானமும் விவாதத்திற்கு விடப்பட்டது. அது இந்திய அளவில் ஒரு விவாதத்தைத் தூண்டியது. அதையொட்டி ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கட்டுரைகள் சிலவற்றை தோழர் எஸ். வி.ராஜதுரை தமிழாக்கம் செய்து மின்னம்பலம் இணையதளத்தில் வெளியிட்டார்

பாசிசம் குறித்த புரிதல் இப்போது எல்லா அரசியல் கட்சிகளுக்குமே தேவையாக இருக்கிறது. பாசிசத்தை எதிர்ப்பதாகச் சொல்லுகிறவர்களும் அதைப் பற்றிய புரிதலை வளர்த்துக்கொள்வது அவசியம். எனவேதான் சிபிஐ(எம்) கட்சியின் தீர்மானத்தை முன்வைத்து எழுதப்பட்ட இந்தக் கட்டுரைகள் பரவலாகப் பலரையும் சென்றுசேர வேண்டும் என்ற நோக்கில் இங்கேநூலாகத் தொகுத்துத் தரப்படுகிறது. இதை வெளியிடுவதற்கு ஒப்புதல் அளித்த தோழர் எஸ்.வி.ராஜதுரை அவர்களுக்கு நன்றி!

இந்த நூலில் நான்கு கட்டுரைகள் 4 முக்கிய ஆளுமைகளால் எழுதப்பட்டு எஸ் வி ராஜதுரை அவர்கள் தொகுத்து தமிழாக்கம் செய்யப்பட்டு அதை விடுதலை சிறுத்தை கட்சியின் விழுப்புரம் பாராளுமன்ற உறுப்பினர் தொகுத்து வெளியிட்டுள்ள. அவர் எழுதிய பதிப்பக உரை இந்த நூல் குறித்த சிறந்த அறிமுகத்தை வழங்குவதால் அதை அப்படியே பதிவு செய்கிறேன்.

பாசிசம்: ஓர் விவாதம் 

தொகுப்பும் தமிழாக்கமும்: எஸ்.வி.ராஜதுரை கட்டுரை 

ஏப்ரல் 2025 பக்கங்கள்: 58 · ₹80

 மணற்கேணி பதிப்பகம்  

மின்னஞ்சல்: manarkeni@gmail.com 

நன்றி இந்த நூலை பிடிஎஃப் கோப்பாக பெறுவதற்கு Dr. டி. ரவிக்குமார் பாராளுமன்ற உறுப்பினர் விழுப்புரம் அவரையே அணுகினால் அனுப்பி வைக்கிறார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேரழிவின் வாருங்காலம்

அன்னவாசல் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மகளிர் தின மரநடும் விழா மற்றும் கவிஞர் செங்கை தீபிகாவின் பறக்க தயங்கும் பட்டாம்பூச்சி நூல் வெளியீடு...

அம்பேத்கர் ஆக்கங்கள் மக்கள் பதிப்பு அறிமுகம்