புத்தனின் அரிவாள் - கவிதைகள் - அறிமுகம்
புத்தனின் அரிவாள் - கவிதைகள்
அ. நிலாதரன் - ஆசிரியர்
முதல் பதிப்பு : டிசம்பர் -2024
கொம்பு பதிப்பக வெளியீடு - 2024
₹100 - பக்கம் 64
நிலாதரனின் கவிதைகள், எரியும் குடிசைக்குள்ளிருந்து ஓடிவந்திருப்பவை; உழவுக்குப் போகாத ஏர்க்கலப்பையில் பூக்கும் பேய்க்காளன் போன்றவை. தம் துருவேறிய கதிர் அரிவாள்களை, மொழியில்வைத்துத் தீட்ட முயல்வதின் வழியே இவர் கவிதைகளை உருவாக்குகிறார். வரலாற்றின் ரத்தவாடை மிகுந்த தன் நிலத்தின் கடந்தகால நினைவுகளை மீட்டி, இந்த நூற்றாண்டுக்கான அரசியலை தன் கவிதைகளில் முன்வைக்கிறார். அதன் ஒரு பகுதியாகத்தான். உழைக்கும் மக்களின் கழனிப் பக்கமாக வரும் புத்தனின் கைகளில் அரிவாளைத் திணிக்கிறார். இந்த நூற்றாண்டு வாழ்க்கையின் ஒரு துண்டுக் காட்சியின் வழி. தமிழ்ச் செவ்விவியல் மரபையும் நிலாதரனின் இக்கவிதைகள் சித்திரமாக்கியுள்ளன. நம் திணைசார் வாழ்க்கை அதன் ஈரப்பதத்துடன் வரையப்பட்டுள்ளது. வேட்டைக்குத் தப்பிய புலியைப் போன்ற கொடுங்காமம். கவிதை வரிகளுக்கு இடையே பதுங்கித் திரிவது உயிர்த் தீயைச் சுட்டெரிக்கிறது. விடுதலை வேட்கையுள்ள வர்க்கத்தின் மூர்க்கம்கொண்ட மொழியும், கட்டுக்குள் அடங்காத பரிசோதனை வடிவங்களும், நிலாதரனின் இந்தக் கவிதைகளை கவனம்மிக்கவையாக ஆக்குகின்றன.
சாணிப்பால் செரித்த இரைப்பைகளுக்கும், சாட்டையடி சுமந்த முதுகுகளுக்கும்... சமர்ப்பணம்
கீழ்த் தஞ்சையின் பச்சை வயல் வெளிகளில் சிகப்பை அறுவடை செய்த கதிர் அருவாள்களே கவிதையாக...
நெய்தல் தோட்டாக்கள்
"கடலுக்குப் போன தலைவன்
இன்னும் வீடு திரும்பவில்லை
கரைமினாய் தவிக்கும்
தலைவியின் இதயத்தில் வெடிக்கின்றன
நிமிடத்திற்கு 72 தோட்டாக்கள்"- இப்படியாக நெய்தலில் துவங்கும் கவிதை
"அப்பாவின் பற்கள் விழுந்து விட்டன
கருக்கில்லாமல் கிடக்கிறது
அவரது கதிர்அரிவாள்"
"கதிர் அரிவாளை போலவே
அப்பாவும் வளைந்து போனார்
அவரை நிமிர்த்தம்
சுத்தியல் எங்கே ?"
"எத்தனையோ வேலி கதிர்களை அறுத்தன
எங்கள் கதிர் அரிவாள்கள்
ஆனாலும் நிறைய வில்லை
வரலாற்றில் அரைப்படி"
(வேலி - கீழ தஞ்சையின் சற்றேறக்குறைய 6.50 ஏக்கருக்கான பழைய அளவை)
இப்படியாக கவிதைக்குள் பனங்கருக்கை குருதியில் தோய்த்து கவிதையில் எழுத்துக்களால் வாசம் பரப்புகிறார் நிலாதரன்.
-வாழ்தல்-
"காத்திருக்கின்றன
வலைகளின் கண்கள்
தூண்டில் முட்களின் நாவுகள்
கொக்குகளின் அலகுகள்
ஏதாவது ஒன்றில் அகப்பட்டு
மீன் சாகத்தான் செய்கிறது
அனைத்துக்கும் தப்பி
மீன் வாழத்தான் செய்கிறது"
இப்படியாக எந்த இடுக்கிலும், இருட்டிலும் வரலாற்றின் கங்கு கொஞ்சூண்டு இருக்கும். என்கின்ற நம்பிக்கை வரியோடு நிறைவுகிறது.
-ஒட்டடை பாலச்சந்திரன்
கருத்துகள்