திரை மறைவு லாபியே, உயர் பொறுப்பு
இந்திய பண்பாடு அவ்வளவு உயர்வானது ஒன்றும் இல்லை. வரலாறு நெடுகிலும் கயமை, துரோகம், பழிதீர்த்தல் போன்ற மோசடிகளையே உட்கிடக்கையாக கொண்டது. சமூக நீதிக்கு எதிரான படிநிலைப் பண்பாட்டை அரசியல் சாசன சட்டத்தின் மெதுவான வினையால் மாற்றங்கள் வரத் தொடங்க, இனி சுரண்டல்களை சமூக அநீதியை மூடி மறைக்க முடியாது முடியாது என்றபோது, தன்னை தக்க வைத்துக் கொள்ள பாசிசமாக பரிணமிக்கிறது. கடந்த காலத்தின் மருந்தாக இருந்த பண்பாட்டின் நல்விழிமியங்கள் இப்போது காட்சி பொருளாக, கடைப்பிடிக்க முடியாதவர்களால் போற்றி பாராட்டி விருது கொடுத்து தனிமைப்படுத்தும் தடித்தனமாக மாறி உள்ளது. குடும்பம் என்ற சிறிய அலகில் தொடங்கி சாதி, கோவில் நிர்வாகம், உள்ளூர் அதிகாரம், பெரு நிறுவனங்கள், கட்சி, அரசு பதவிகள், ஆளுங்கட்சி உயர்நிலை, இந்திய அரசாங்கத்தின் உயர் பொறுப்பு வரை திரை மறைவு லாபிக்களால் தான் உச்ச அதிகாரம் தீர்மானிக்கப்படுகிறது.
திரை மறைவு பண்பாடு சாதிகளில் ஆழமாகவும், முற்போக்கு அமைப்புகள், அதிகாரம் அற்ற அடையாள நிறுவனங்களில் குறைவாக இருக்கிறது. ஒரு போட்டியில் சமமான வாய்ப்புகள் உள்ள இருவரில் கூடுதல் திரை மறைவு வாய்ப்பாக, வேண்டிய சாதிக்கு வாய்ப்பு அமைவது அதிகம். அதுவே உச்சிக்கு கொண்டு செல்லும். எல்லாவற்றிலும் விதிவிலக்கு உண்டு. எங்கோ சில மாற்றங்கள் ஏற்படும். அதைக் கொண்டு மொத்தத்தையும் கணக்கிட கூடாது. அப்படியான இந்தியாவில், புதிய நீதிபதி "ஜெய் பீம்" என்றும், பாராளுமன்றத்தை விட "அரசியல் சாசனம் உயர்ந்தது" என்றும் பதவி ஏற்பு விழாவுக்கு பிறகு 'ஃபயர்' விட்டுள்ளார். சமூக ஊடக நண்பர்கள் ஏகத்துக்கும் சிலாகிக்கிறார்கள். நானும் வரவேற்கிறேன். ஊடகப் பேட்டிகள் செய்தி பரபரப்புக்கு உதவும், அரசியல் சாசனப்படி அவர் அளித்த கடந்த கால தீர்ப்பின் வழியாக அவரை அணுகுவதே சரி. உயர் பொறுப்புக்கு வரும் விளிம்பு நிலை மக்களின் பிரதிநிதிகள் துருப்பு சீட்டுகளாகவே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். அதிகாரம் வாய்ந்த அமைப்புகளில் தலையாட்டி பொம்மைகளாக இருப்பார்கள். முப்படைக்கு தலைவர் ஜனாதிபதி, ஆனால் பிரதமர் முப்படை தலைவர்களுக்கு கட்டளையிடுகிறார் போர் நடத்துகிறார். மக்களுக்கு பேட்டி அளிக்கிறார்.
உழைக்க விரும்பாத சிறு கூட்டம் தனது குறைந்தபட்ச புத்திக்கூர்மையை கொண்டு பெரும்பான்மை வெகுமக்களின் உழைப்பை, பொதுவான இயற்கை வளங்களை திருடும் பொருட்டு உருவாக்கியதே படிநிலைப் பண்பாடு. இந்தியா வரலாற்றில் உயர் பொறுப்பு உச்சி அதிகாரங்கள் திரை மறைவாக சிலரின் நலன்களை பேணுவது, பெரும்பான்மை மக்களை வஞ்சிப்பது என "படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில்" என்ற நிலையை பின்பற்றுபவர்களே அதிகாரத்தை அடைகிறார்கள். நேரான கம்பி உடைந்து விடும், நேரான நதியே உலகில் இல்லை.
ஆக, கனம் நீதிபதி, ராணுவ அதிகாரியின் பேட்டி, விமானப்படை பெண் சிறுபான்மை தலைமை விஞ்ஞானி, தமிழக ஆளுநர், துணை ஜனாதிபதி, ஒன்றிய அரசின் மங்குனி அமைச்சர்கள் என பட்டியல் நீளம். இவர்கள் பேட்டி அழகாக கொடுப்பார்கள், திரை மறைவாக சமூக நீதிக்கு எதிராக அறிவியலை மறுத்து பாசிசத்தை பரப்பிக் கொண்டே இருப்பார்கள். இப்போது நான்காவது தூணும் பதட்டத்தையும், பரபரப்பையும், பொய்யையும் சொல்லிக் கொண்டே இருக்கிறது. திரும்பத் திரும்ப ஏன் பொய் சொல்கிறார்கள்? மக்கள் குழப்பமடைந்து சரியை கைவிடுவார்கள். ஆகவேதான் திரும்பத் திரும்ப பாசிசம் பொய்யாக பரப்பப்படுகிறது.
அவர்கள் வார்த்தையில் நடித்துக் கொண்டு, எதார்த்தத்தில் கொடூரமாக இருப்பார்கள். பசுத்தோல் போர்த்திய புனைகள். நிதி மூலதனம் தனது தோல்வியை மறைக்க ஜனநாயகத்தை சாதகமாக பயன்படுத்தி பாசிசமாக வரித்துக் கொண்டு, கொலைகளை நியாயப்படுத்தும் கொடூரங்களை அரங்கேற்றம் "ஜனநாயகம்".
ஜெய் பீம் மங்கி'பாத்'
கருத்துகள்