கருத்தரங்கு - உயர் கல்வி பெறுவதில் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் - தீர்வுகள்


இந்தியாவில் உயர்கல்வி  பெறுவதில் மாணவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளும் தீர்வுகளும் கருத்தரங்கம். 

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மற்றும் அகில இந்திய முற்போக்குப் பேரவை இணைந்து வரும் 09.08.2025 சனி மாலை சென்னையில்

இந்தியாவில் கல்வி மிக வேகமாக தனியார் மயமாகி வருகிறது. வணிக மயமாகி வருகிறது. வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களும் தங்கள் கிளைகளை இந்தியாவில் திறக்கின்றன. 

இதனால் ஏழை எளிய மாணவர்களுக்கு  கல்வி எட்டாக் கனியாகி வருகிறது. 

பள்ளிக் கல்வி , உயர் கல்வியும் ,தொழிற் கல்வி அனைத்தும்  தனியார் மயமாகி வருகின்றன. 

உயர் கல்வி பெறத் தகுதியுள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒன்றிய- மாநில அரசுகள் போதிய உயர்கல்வி நிறுவனங்களை,தொழிற் கல்லூரிகளை அரசுத்துறைகளில் உருவாக்
கவில்லை. இது அரசு கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு மாணவர்களுக்கிடையே கடுமையான போட்டியை உருவாக்கியுள்ளது. 

பள்ளிப் படிப்பை பல துன்ப துயரங்களுக்கிடையே, 
இன்னல்களிடையே படித்து முடிக்கும், பல லட்சம் ஏழை மாணவர்கள் ,உயர் கல்வியை எப்படி பெறுவது என ஏங்கித் தவிக்கின்றனர். 

மிக அதிகமான கல்விக் கட்டணம்,கட்டாய நன்கொடை வசூல் போன்றவை ஏழை மாணவர்கள் உயர்கல்வி பெறமுடியாத நிலையை உருவாக்கி வருகின்றன. 

அவர்களின் ஏக்கப் பெரு மூச்சுக்கு ஆறுதலாய் , சில அறக்கட்டளைகள் செயல் படுகின்றன. 

அறக்கட்டளைகளால் எல்லா மாணவர்களுக்கும் உதவிட முடிவதில்லை. அது சாத்தியமுமில்லை. கல்வி என்பது சலுகையல்ல; உரிமை. 

கல்வியை இலவசமாக வழங்க வேண்டிய கடமையிலிருந்து, அரசுகள் நழுவுவதால், உயர்கல்வி பெறுவதற்காக,தனியார் அமைப்புகள் மற்றும் கந்துவட்டிக் காரர்களிடம்  மாணவர்கள் கையேந்தும் பரிதாப நிலை நீடிக்கிறது. 

மாணவர்கள் கல்விக்காக கையேந்தும் நிலையை நமது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளும் உருவாக்கியுள்ளன. 

உழைக்கும் மக்களின் உழைப்பால் ,
வியர்வையால், உதிரத்தால் உருவான, இந்த தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் ,உழைக்கும் மக்களின் குழந்தைகளுக்கு,  எந்த நிபந்தனைகளும் இன்றி வட்டியில்லா கல்விக் கடன்களை கொடுத்து உதவிட வேண்டும். ஆனால் அவை மறுக்கின்றன. 

பல ஆயிரம் கோடி ரூபாய்களுக்கு வரவு - செலவு  அறிக்கைகளை தாக்கல் செய்யும் அரசுகள், ஏழை மாணவர்களின் உயர் கல்விக்கு உதவிட  போதிய நிதியை ஒதுக்கீடு செய்ய மறுக்கின்றன. 

ஒன்றிய - மாநில அரசுகள், எஸ்.சி/எஸ்.டி மாணவர்களுக்கான போஸ்ட் மெட்ரிக் உதவித் தொகைகளை  முறையாக வழங்குவதில்லை.
கல்வி உதவித் தொகைகளை  அதிகப்படுத்துவதுமில்லை. 

இதனால் ,தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் எஸ்.சி/எஸ்.டி மாணவர்களின் சேர்க்கை விகிதம் 50 விழுக்காடு அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. 
அதே சமயம், பொறியல் படிப்புகளுக்கான ஆயிரக் கணக்கான இடங்கள் , தனியார் கல்லூரிகளில் காலியாகப் போகின்றன. 

மருத்துவக் கல்வி தனியார் மயமானதும் கடும் நெருக்கடிகளை உருவாக்கி வருகிறது. 

மருத்துவக் கல்லூரிகளில் சேர கடும் போட்டி நிலவுகிறது. இடம் கிடைக்காததால் பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். 

அதே சமயம்,  கடந்த சில ஆண்டுகளாக தனியார் மருத்துவக் கல்லூரிகளில் , ஒவ்வொரு ஆண்டும் ,இரண்டாயிரம் முதல் மூவாயிரம்  எம்.பி.பி.எஸ் இடங்கள் வரை காலியாகப் போகின்றன . 

மருத்துவக் கல்வி தனியார் மயமானதும் , தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் மிக அதிகமாக இருப்பதும், கட்டாய நன்கொடை வசூலுமே இதற்குக் காரணம் . 

இந்நிலையில் ஒன்றிய அரசின் அழுத்தத்தால் - மாநில அரசுகளே மருத்துவக் கல்லூரிகளை தொடங்காமல், மாவட்ட அரசு மருத்துவமனைகளை தனியாருக்கு வழங்கி, பொது தனியார் பங்களிப்பு மாதிரியில் ( PPP model ), மருத்துவக் கல்லூரிகளை தொடங்குகின்றன. 

இது எரியும் தீயில் எண்ணெய்யை வார்ப்பது போல் உள்ளது. 

எனவே ,இத்தகைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டிய அவசியம் உள்ளது. 

சர்வதேச நிதி மூலதனம் மற்றும் உலக வங்கியின் ஆலோசனைகளின் அடிப்படையில் , ஒன்றிய அரசு தேசிய கல்வி கொள்கை  2020 ஐ உருவாக்கியுள்ளது . 

இந்தக் கல்விக் கொள்கை, கல்வியை மையப்
படுத்துகிறது. கார்ப்பரேட் மயமாக்குகிறது. காவி மயமாக்குகிறது. மறைமுகமாக குலக்கல்வி முறையை திணிக்கிறது. இந்தி - சமஸ்கிருதம், இந்துத்துவா கருத்தியல் திணிக்கப்படுகிறது. 

இக் கல்விக் கொள்கை நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் மாநில உரிமைகளுக்கு எதிராக உள்ளது. 

இக்கல்விக் கொள்கை, ஏழை - எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு எதிரானதாகும் . 

இக்கல்விக் கொள்கையால்,
சிறிய கல்லூரிகள் மூடப்படும் ஆபத்து உள்ளது. இது பெண் கல்விக்கு எதிராக அமையும். 

உயர் கல்வியில் மாணவர்கள் எதிர் கொண்டுள்ள பல்வேறு  பிரச்சனைகளை தீர்ப்பதற்குப் பதிலாக , தேசிய கல்விக் கொள்கை - 2020, பிரச்சனைகளை தீவிரப் படுத்தி உள்ளது . 

அதே போன்று மருத்துவக் கல்வியில் ஒருங்கிணைந்த மருத்துவக் கல்வி மிக்ஸ்ஸோபதி போன்றவற்றை ஒன்றிய அரசு திணிக்கிறது. 

இது நவீன அறிவியல் மருத்துவத்தை ஒழித்துக் கட்டும் முயற்சியாகும். 

இம்முயற்சி நாட்டு மக்களுக்கு தரமான அறிவில் பூர்வமான மருத்துவ சிகிச்சைகள் கிடைப்பதை கேள்விக் குறியாக்கிவிடும். 

எனவே, இத்தகைய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும். 

அனைவருக்கும் ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்விவரை ,இலவசக் கல்வி கிட்டிடச் செய்ய வேண்டும். 

இந்நோக்குடன்,  சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மற்றும் அகில இந்திய முற்போக்குப் பேரவை சார்பில், சென்னையில் வரும்  09.08.2025  சனிக்கிழமை மாலை 4 . 00 மணிக்கு, 
" இந்தியாவில் உயர் கல்வி பெறுவதில் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்"
என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது . 

சென்னை எழும்பூர், 107- பாந்தியன் சாலையில் ,எழும்பூர் அரசு மியூசியம் எதிரில் அமைந்துள்ள ,இக்ஸா  மையத்தில் இக்கருத்தரங்கம் நடைபெற உள்ளது. 

இக்கருத்தரங்கத்திற்கு அகில இந்திய முற்போக்குப் பேரவையின் மாநில துணைத் தலைவர் பி.காளிதாசன் தலைமை தாங்குகிறார் . 

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின்  பொருளாளர் டாக்டர் ஜி.இரமேஷ் மற்றும் என்.எஸ். செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். 

அனைத்திந்திய முற்போக்குப் பேரவையின் மாநில நிர்வாகி சி.பாலச்சந்திரன் வரவேற்புரை நிகழ்த்துகிறார். 

இக்கருத்தரங்கை சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர். இரவீந்திரநாத் துவக்கி வைக்கிறார் . 

"உயர் கல்வியில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் " குறித்து ,அகில இந்திய முற்போக்குப் பேரவையின் ,அகில இந்திய துணைத் தலைவர் டாக்டர் யுகல் ஜே ராயலு சிறப்புரையாற்றுகிறார். 

மருத்துவக் கல்வியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து, சமாதானம் மற்றும் முன்னேற்றத்திற்கான இந்திய டாக்டர்கள் சங்கத்தின் அகில இந்தியச் செயலாளர் டாக்டர் 
ஏ. ஆர். சாந்தி கருத்துரை வழங்குகிறார் . 

"பி.ஏ.எம்.எஸ் என்ற ஆயுர்வேதா மருத்துவப் படிப்பையும் ,எம்.பி.பி.எஸ் என்ற நவீன அறிவியல்  மருத்துவப் படிப்பையும், இணைத்து ,புதிய மருத்துவப் படிப்பை உருவாக்க ஒன்றிய அரசு முயல்தால் ஏற்படப்போகும் பிரச்சனைகள்"  குறித்து , அகில இந்திய முற்போக்குப் பேரவையின் மாநிலத் தலைவர் டாக்டர் 
என். வெங்கடேஷ் கருத்துரை வழங்குகிறார் . 

அகில இந்திய முற்போக்குப் பேரவையின் மாநில கவுரவத் தலைவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி கருத்தரங்கை முடித்து வைத்து நிறைவு உரையாற்றுகிறார். 

அகில இந்திய முற்போக்குப் பேரவையின் சென்னை மாவட்ட நிர்வாகி ஆர்.சௌமியா நன்றியுரை ஆற்றுகிறார். 

இக்கருத்தரங்கில் ஏராளமானோர் பங்கேற்கின்றனர் . 

இவண்,
டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத், பொதுச் செயலாளர்,
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்.
9940664343
9444181955

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேரழிவின் வாருங்காலம்

அம்பேத்கர் ஆக்கங்கள் மக்கள் பதிப்பு அறிமுகம்

அன்னவாசல் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மகளிர் தின மரநடும் விழா மற்றும் கவிஞர் செங்கை தீபிகாவின் பறக்க தயங்கும் பட்டாம்பூச்சி நூல் வெளியீடு...