மற்றும் குழுவினர் - யாழிசை மணிவண்ணன்
மற்றும் குழுவினர்
யாழிசை மணிவண்ணன்
கவிஞரின் ஐந்தாவது தொகுப்பு.
வெளியீடு அலர் பதிப்பகம்
விலை 130
alar.publication@gmail.com
யாழிசை மணிவண்ணனின் கவிதைகள் எந்தத் தர்க்கங்களுக்குள்ளும் தலை காட்டாமல் எளியவற்றின் பக்கம் நின்று எம்பிக்குதிப்பவை. இத்தொகுப்பில் யாழிசை தன் மூன்றாவது பார்வையால் மொழியையும் கற்பனைகளையும் யதார்த்தங்களின் வீதியில் வடங்களாகப் பிணைக்கிறார். அவர் இழுக்கும் திசையெங்கும் கவிதைகள் சப்பரமாக உருமாறி இணங்கிச் செல்கின்றன. வழியெங்கும் தான் சந்தித்த மனிதர்களோடு சிலாகித்துப் பேசுகின்றன. புழங்கிய தருணங்களோடு சல்லாபம் கொண்டு இடையிடையே காமத்தின் மண்டகப்படிகளில் அருள் பாலிக்கின்றன. தேர் தொடங்கிய தேரடிக்கே வந்து நிலைகுத்துவதைப் போல முடிவை நோக்கி நகருவதே இக்கவிதைகளின் பலம்.
சொல் சிக்கனம் நமது மொழியின் செறிவை சிறப்பையும் சொல்லக்கூடிய கவிதைகள். கற்பனையும், ஒப்பிடும் கனக்கச்சிதமான. வீணடிக்காத சொற்களின் பிரயோகங்கள். நூல் வடிவமைப்பு மிக நேர்த்தி. கவிதைகளை அடக்காமல் ஒரு பக்கத்தில் மூன்று வரி என கவிதை கனமாக பக்கம் முழுமையும் நிரப்பிக் கொள்கிறது. வார்த்தைகளை வீணடிக்காமல் புத்தகத்தின் பெரும் பகுதி தாள்கள் வெறுமையாக. கவிதையை கட்டமைப்பை நுணுக்கி நுணுக்கி செதுக்கியிருக்கிறார் கவிஞர்.
நிறைய கவிதைகள் இருக்கின்றன. நான் படித்த நேரத்தில் என் உளவியலோடு ஒத்து போன கவிதைகளை உங்களுக்காக.
"மற்றும் குழுவினர்தான்
தாளத்தின் கோர்வையை
நூல் பிரியாமல் இசைத்தவர்கள்
மற்றும் குழுவினர்தான்
ஒரு குரலாய் ஓங்கி
அந்தப் பாடலை மலையேற்றியவர்கள் மற்றும் குழுவினர்தான்
இந்த நிலம் கண்ட கொடும்போர்களைத் தன் தலையைக் கொடுத்து நடத்தியவர்கள்
மற்றும் குழுவினரின்
தவறொன்றும் உள்ளதுதான்
அவர்கள் தம் குதிரைகளைச் செம்மறியென்றே நம்பினார்கள்."
இப்படி வரலாறு நெடுகிலும் பெரும்பான்மை மக்களின் உழைப்பின் இழப்பை காட்சிப்படுத்துவதே #மற்றும் குழுவினர் தனது நூலின் தலைப்பாக வைத்துள்ளார்.
"இடது பக்கம் பட்டாம்பூச்சியும்
வலது பக்கம் தேளும்
பச்சை குத்திக்கொண்டு
முன்னழகில் மிதக்கவிடுகிறாள் ஒருத்தி அமுதும் நஞ்சும்
ஒரு கடலில் விளைந்ததுதானே
எனச் செருமிக்கொண்டான் திருநீலகண்டன்."
இடது பக்கம் பட்டாம்பூச்சியும் வலது பக்கம் தேடும் என தனது அரசியலில் குறியீடோ? எனக்கு பிடிச்சிருக்கு.
"கன்னச்சதைகளை அரிந்து
உப்புப் பற்களை நிரப்பி
மாயச் சிரிப்பை உதிர்த்தபடி ஊறுகாய்க்குக் காய்கின்றன மாங்காய்கள்.
அதுவே கோரம்
அதுவே எழில்
அதுவே கூடாக்காமம்."
அடடா ஒரு மாங்காய்க்குள் நல்லது கெட்டதுமான வாழ்க்கை. ஞானத்துக்கு அழகு உண்டா? கவிதையில் கைக்கூடி விடுகிறது. கவிஞரின் ஞானமும் கற்பனையும் பிசைந்து கவிதை
"வள்ளியின் திருமணத்தோடு
முடிந்து விடுகிறது.
பெருத்த ஏமாற்றம்
உண்மையில் நாடகம் என்பது அங்கிருந்துதான்
தொடங்கியிருக்க வேண்டும்."
காதலர்கள் கை பிடிப்பதோடு முடியும் நமது காவியங்கள். வாழ்வில் முரண்பட்டு போகும் பண்பாட்டு ஒவ்வாமையை காட்சிப்படுத்தியது அருமை. எழுதப்படாத கோணங்களை கவிதை ஆக்கி சிறந்த தொகுப்பை கொடுத்திருக்கிறார். பக்கத்துக்கு ஒரு கவிதை என 111 கவிதைகள். வெவ்வேறு பொருண்மைகளில் கற்பனையும் எதார்த்தத்தையும் புனைந்த வார்ப்புகள், சிக்கனமான சொற்ச்சேர்க்கை என அழகு. வாழ்த்துக்கள்
கருத்துகள்